×

வேலூர் மயான கொள்ளை திருவிழாவில் 60 அடி உயர தேர் சரிந்து விபத்து

 

வேலூர் மயான கொள்ளை விழாவில் 60 அடி தேர் சாய்ந்து விபத்துகுள்ளானதில் 7 பேர் காயமடைந்தனர்.


வேலூர் மாவட்டத்தில் முக்கிய விழாக்களில் ஒன்றான மயான கொள்ளை விழா வேலூர் பாலாற்றங்கரையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் 10 ஊர்களில் இருந்து அம்மனை அலங்கரித்து தேரில் எடுத்து பாலாற்றுக்கு அழைத்து வந்து சூரையாடி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் சூரையாடல் முடிந்து நள்ளிரவு சுமார் 12 மணிக்கு காட்பாடி கழிஞ்சூரில் இருந்து வந்திருந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட தேர் பாலாற்றில் இருந்து சாலைக்கு இழுத்து வரும் போது திடீரென நிலைதடுமாறி  பக்கவாட்டில் சாய்ந்தது. இதில் தேரில் இருந்த 10 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை காவல் துறை மற்றும் பொதுமக்கள் மீட்டு படுகாயம் அடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, SP சிவராமன், கோட்டாட்சியர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விபத்து குறித்து கேட்டறிந்தார். மேலும் இது குறித்து விசாரிக்குமாறு காவல் துறைக்கும், அடுத்த முறை இது போன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கக்கூடாது என விழா குழுவினருக்கு உத்தரவிட்டார். மேலும் படுகாயம் அடைந்து அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி நேரில் நலம் விசாரித்தார்.

பின்னர் சாய்ந்த தேரில் இருந்த அம்மன் சிலையை மட்டும் மீட்டு கழிஞ்சூர் கிராம மக்கள் ஊருக்கு எடுத்து சென்றனர். அரசு விதிப்படி 12 அடிக்கு மேல் தேர்கள் இருக்கக்கூடாது என விதி இருந்த போதும் மயான கொள்ளை திருவிழாவின் போது விருதம்பட்டு, கழிஞ்சூர், மோட்டூர் ஆகிய 3 தேர்கள் தலா 60 அடி உள்ளது. மேலும் இதேபோல கடந்த 2023 ம் ஆண்டு மோட்டூர் கிராமத்தின் தேரும் பாலாற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.