×

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 6 வயது சிறுமி பலி

 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே  பாட்டி வீட்டுக்கு வந்த  6 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள உம்பிலிக்கம்பட்டியை சேர்ந்த அம்பிகாவின் மகள் கோகிலாவுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் வேலங்காடு பகுதியை சேர்ந்த காபி பாரில்  டீ மாஸ்டராக பணிபுரியும் கோவிந்தராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்து, ஆறு வயதில்  மதுமிதா என்ற பெண் குழந்தை உள்ளது. சில தினங்களுக்கு முன்பு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்ததால், குழந்தைகளுடன் உம்பிலிக்கம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் அம்பிகா தங்கி  உள்ளார்.  

சிறுமி மதுமிதாவும் பாட்டி வீட்டில் இருந்துள்ளார். இன்று சிறுமி மதுமிதா  வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது  வீட்டின் அருகே  கோயில் கட்டுவதற்காக தோண்டப்பட்ட  சுமார் 7 அடி  ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் சிறுமி தவறி விழுந்து மூழ்கினார். சிறுமி விழுந்தது யாருக்கும் தெரியாததால்  நீரில் மூழ்கி இறந்து போனார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமியை காணாததால்,  அவரது பாட்டி அம்பிகா , தாய்  கோகிலா ஆகிய இருவரும் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினர். பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால் , சந்தேகம் அடைந்து அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் பார்த்தபோது சிறுமி நீரில் மூழ்கியது தெரியவந்தது. பின்னர் தண்ணீர் தொட்டியில் இறங்கி ,  சிறுமியின் உடலை  சடலமாக  மீட்டனர். குழந்தையின் சடலத்தை பார்த்த உறவினர்கள் கதறி அழுது சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

தகவலறிந்த தீவட்டிப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு  விரைந்து சிறுமியின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோரின் அலட்சியத்தால் தண்ணீர் தொட்டியில் சிறுமி மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.