இனி தியேட்டர்களில் 6 காட்சிகள்..! தயாரிப்பாளர்கள் கோரிக்கைக்கு ஓகே சொன்ன தவெக அரசு!
தீபாவளிக்கு சூர்யா நடித்துள்ள சீன் திரைப்படம் , நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் 2 மற்றும் இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ராமாயணா அகிய மூன்று முக்கியமான திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி சூர்யாவின் சீன் திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் 50 சதவீதம் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மூக்குத்தி அம்மன் படத்திற்கு 30 சதவீதமும் , ராமாயணா படத்திற்கு 20 சதவீத திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாளில் இருந்து ஒரு வாரத்திற்கு தினசரி 6 காட்சிகள் திரையிட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் வருமாறு;
தமிழ் பிலிம் ஆக்டிவ் ப்ரொடியுசர்ஸ் அசோசியேஷன்ஸ், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன் வைத்தனர். அவற்றில் முக்கியமாக, தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடும் நாளிலிருந்து ஒரு வார காலத்திற்கு திரைப்படங்களை நாளொன்றுக்கு 6 காட்சிகள் காலை 6.00 மணியிலிருந்து அடுத்த நாள் அதிகாலை 2.30 மணி வரை திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர்.
1957ம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ், தியேட்டர்களுக்கு வழங்கப்படும் 'சி' படிவ உரிம நிபந்தனை 14Aன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது. மேலும், தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள், வெளியிடப்படும் நாளிலிருந்து, 7 நாட்களுக்கு தினசரி 5 காட்சிகள் திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனி மற்றும் ஞாயிறுகளில் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதியளிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.
திரைப்படத் துறை அளித்த கோரிக்கை குறித்து முதல்வர் விஜய் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் செய்ய உத்தேசித்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி 6 காட்சிகளுக்கு மிகாமல் காலை 6.00 மணியிலிருந்து அடுத்த நாள் அதிகாலை 2.30 மணி வரை திரையிட உத்தரவிட்டுள்ளார்.உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரி 6 காட்சிகள் திரையிடவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.