×

சங்கராபுரம் பட்டாசு விபத்தில் 6 பேர் உயிரிழப்பு: ராமதாஸ் இரங்கல்!!

 

சங்கராபுரம் அண்ணாநகர் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் செல்வகணபதி, தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடை போடுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு அவர் பட்டாசு கடை அமைத்து விற்பனை செய்து வந்த நிலையில் நேற்றிரவு அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் பட்டாசு கடை அருகில் இருந்த பேக்கரியிலும் தீ பரவி, அங்கிருந்த சிலிண்டர்கள் வெடித்ததில் பெரும் சேதம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த  தீயணைப்பு துறையினர், அதிகாலை வரை போராடி தீயை அணைத்தனர். பட்டாசு கடை விபத்தில் 10ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள பட்டாசுக் கடையில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்; 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பட்டாசுக் கடை விபத்தில் காலித், ஷா ஆலம், சையத் அலி, ஷேக் பஷீர், அய்யாசாமி உள்ளிட்ட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் அய்யாசாமி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், எழுத்தாளரும் ஆவார். பட்டாசுக்கடை விபத்தில் உயிரிழந்த அனைவரும் அவர்களது குடும்பங்களின் வருவாய் ஈட்டும் உறுப்பினர்கள் ஆவர். அதனால், அவர்களை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அந்தக் குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

அதேபோல், காயமடைந்த அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான பாதுகாப்பு விதிகளை வலுப்படுத்தி, இத்தகைய விபத்துகள் நடப்பதை அரசு தடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.