×

சென்னை விமான நிலையத்தில் ஊறுகாய், அல்வா, ஜாம் எடுத்து செல்ல தடை!

 

நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் எல்லை பகுதிகள், முக்கிய அரசு அலுவலகங்கள், விமான நிலையங்கள், முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் ஏற்கெனவே 3 அடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும் நிலையில், தற்போது 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு, ஆகஸ்ட் 20ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அங்கு கூடுதலாக மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வரும் 20-ஆம் தேதி வரை விடுமுறை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் வெளிவட்ட பகுதியில் சென்னை மாநகர போலீசாரும் உள்வட்ட பகுதியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன.

விமான நிலையத்தின் பிரதான நுழைவு வாயிலில், சந்தேகத்திற்கிடமான வாகனங்களை பாதுகாப்பு படையினா் நிறுத்தி மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனா். வெடிகுண்டு நிபுணா்களும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்கின்றனா்.

பாா்வையாளா்கள் வருவதற்கு ஏற்கனேவே தடை அமலில் உள்ளது. அது தற்போதும் தொடர்கிறது. அதோடு முக்கிய பிரமுகர்களை வரவேற்கவும், வழி அனுப்ப வருபவர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

விமான பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் விமானத்தில் ஏறும் இடத்தில் ரேண்டம் செக்கப் என்று கூடுதலாக ஒரு பரிசோதனை நடத்தப்படுகிறது.

ஊறுகாய் கொண்டு செல்ல தடை

குறிப்பாக பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. விமானங்களில் சரக்கு பாா்சல்கள் ஏற்றும் பகுதிகளில் பல கட்ட சோதனைக்குப் பிறகு பாா்சல்கள் ஏற்றப்படுகின்றன.

விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால் உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமான நிலைய வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் சக்தி வாய்ந்த லேசர் லைட்டுகளை பயன்படுத்தவும், கியாஸ் நிரப்பிய பலூன்களை பறக்க விடுவதற்கும், டிரோன்கள் பறப்பதற்கும் ஏற்கெனவே சென்னை மாநகர காவல் ஆணையரகம் தடைவிதித்துள்ளது.

விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அச்சப்பட வேண்டிய தேவை இல்லை என்றும், பயணிகள் வழக்கம்போல் தங்கள் பயணத்தை தொடரலாம் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.