ஊழியர்கள் பற்றாக்குறையால் 501 அங்கன்வாடி மையங்கள் மூடல்- டிடிவி தினகரன் அதிர்ச்சி
ஊழியர்கள் பற்றாக்குறையால் நடப்பாண்டில் மட்டும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில், “தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் நிலவும் காலிப்பணியிடங்களால் நடப்பாண்டில் மட்டும் சென்னை, கோவை, ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. குழந்தைகளின் முன்பருவக்கல்வியோடு அவர்களின் முழுமையான வளர்ச்சியையும் உறுதி செய்யும் நோக்கத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தினால் அங்கு பயிலும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை கல்வி முழுவதும் கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 58 ஆயிரத்திற்கும் அதிகமான அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள சுமார் 28 ஆயிரம் ஆசிரியர் மற்றும் சமையலர் பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், பல அங்கன்வாடி மையங்களில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுவதால் உணவு தயாரிப்பது, கர்ப்பிணி பெண்களின் கையேடுகளை பராமரிப்பது என அனைத்து வேலைகளையும் அவர்களே செய்ய வேண்டியிருப்பதால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதோடு குழந்தைகளின் முன்பருவக்கல்வியும் கடுமையாக பாதிக்கப்படும் நிலையையும் உருவாக்கியுள்ளது.எனவே, தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் நிலவும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் மற்றும் சமையலர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, மழலைக் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி மற்றும் தரமான ஊட்டச்சத்து உணவு அங்கன்வாடி மையங்களில் முறையாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.