×

எம்ஐடி மாணவர்கள் 80 பேருக்கு கொரோனா... 50 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி - வெளியான ஷாக் தகவல்!

 

தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் அலை ஆரம்பித்திருக்கிறது. அபாயகரமான டெல்டாவும் அதை விட உக்கிரமாகப் பரவக் கூடிய ஒமைக்ரானும் சேர்ந்து தாக்குவதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. குறிப்பாக சென்னையில் அதிவேகமாகப் பரவுவதால் சென்னைவாசிகள் ஒருவித பதற்றத்தில் இருக்கின்றனர். இதன் காரணமாகவே ஞாயிற்றுக்கிழமையில் முழ் ஊரடங்கு, இன்று முதல் இரவு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு விதித்துள்ளது.

கல்லூரிகளை பொறுத்தவரை ஜனவரியில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு தயாராகும் வண்ணம் ஜனவரி 20ஆம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் முடிவுக்கு அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியான எம்ஐடி மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதே காரணம். குரோம்பேட்டையிலுள்ள எம்ஐடி கல்லூரி விடுதியில் தங்கியிருந்த 80 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 67 பேருக்கும் இன்று 13 பேருக்கும் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. 

அதில் 50 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி தென்படுவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை 1,747 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 330 பேர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். இருப்பினும் முன்னெச்சரிக்கையாக அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4,862 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது.