×

50 கிலோ வெங்காயம் காலி! மீண்டும் ரேஷன் கடைகளில் வெங்காயம் கிடைக்கப் போவது எப்போது?

 

.தமிழகத்தில் வெங்காயம் விளைச்சல் குறைந்துள்ளது. எனவே, மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து எடுத்து வந்து, தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. அம்மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது.

தமிழகத்தில், கிலோ வெங்காயம், 60 - 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே, வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த, ரேஷன் கடைகளில் விற்க, தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, மத்திய அரசிடம் இருந்து முதல் கட்டமாக, 910 டன் வெங்காயத்தை, தமிழக நுகர்வோர் கூட்டுறவு இணையம் வாங்கியது.

இந்த வெங்காயத்தை, தமிழகத்தில் நகர்ப்புறங்களில் உள்ள, 8,914 ரேஷன் கடைகளில் கிலோ, 35 ரூபாய்க்கு விற்பனை செய்யும் பணி, செப். 3ம் தேதி முதல் தொடங்கியது. ஒரு கடைக்கு சராசரியாக, 50 கிலோ வெங்காயம் அனுப்பப்பட்டு, தலா ஒரு கார்டுதாரருக்கு, ஒரு கிலோ வீதம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெரும்பாலான கடைகளில் வெங்காயம் முழுதுமாக விற்று தீர்ந்து விட்டது. எனவே, மேலும் வெங்காயம் வாங்கப்பட உள்ளது. கூடுதலாக, 1,000 டன் வெங்காயத்தை மத்திய அரசின் கூட்டுறவு அமைப்புகளிடம், தமிழக கூட்டுறவு துறை கேட்டுள்ளது. இந்த வெங்காயம் வந்ததும், ரேஷன் கடைகளில் தொடர்ந்து விற்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.