×

#BREAKING வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1.5 லட்சம் மனு 
 

 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க  4 நாட்களில் 1.53 லட்சம் பேர் பெயர் சேர்க்க மனுக்கள் அளித்துள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கியது. இதில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் என்று சொல்லக்கூடிய பிஎல்ஓ அலுவலர்கள் வீடு வீடாக சென்று இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த படிவங்களை வாக்காளர்களிடம் வழங்கி அதைப் பூர்த்தி செய்த பின் மீண்டும் பெற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து பெற்றுக்கொண்ட படிவங்களை உள்ள விபரங்களை சரிபார்த்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர். இதையடுத்து இந்த வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்தவர்கள், இரட்டை வாக்காளர்கள் என ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். எஸ் ஐ ஆர் பணியில் பல இடங்களில் குளறுபடிகள் ஏற்பட்டிருந்த போதிலும் கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டனர்.

இந்நிலையில் தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சம் பேர் நீக்கப்பட்ட நிலையில், 4 நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 571 பேர் மனு அளித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கக்கோரி, 1,196 பேர் இதுவரை மனு அளித்துள்ளனர். இதேபோல் கட்சிகள் தரப்பில் திமுகவிடம் இருந்து மட்டும் ஆட்சேபம் தெரிவித்து 2 மனுக்கள் வந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.