கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதி விபத்து: 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!
கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரையைச் சேர்ந்த கனகராஜ் தனது மனைவி பூர்ணிமா மற்றும் மகள்கள் அமிர்தா, ஆர்த்தி ஆகியோருடன் உடுமலைப்பேட்டைக்கு காரில் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து மீண்டும் மதுக்கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் நல்லம்பள்ளியில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியேட்டரில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த தண்ணீர் லாரியின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் கார் ஓட்டுநர் மற்றும் கனகராஜ், அவரது மனைவி பூர்ணிமா, மகள்கள் அமிர்தா, ஆர்த்தி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த கோமங்கலம் காவல்துறையினர், காரில் இருந்த ஐந்து பேரின் உடல்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த குடும்பத்தினர் மதுக்கரை, குருபம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம், மதுக்கரை பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.