×

5 நாட்கள் பொங்கல் விடுமுறை... மகிழ்ச்சியில் பனியன் நிறுவன தொழிலாளர்கள்!

 

தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. நான்கு நாட்கள் தொடர்ச்சியாக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. வேறு எந்த திருவிழாவுக்கும் இல்லாத சிறப்பு இதற்கு உண்டு. மத பாகுபாடின்றி அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடும் திருவிழா தான் பொங்கல். அதனால் தான் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு பாகுபாடில்லாமல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குகிறது. 

பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நான்கு நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்படும். இதனால் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் பொங்கல் திருவிழாவைச் சிறப்பாக கொண்டாடுவார்கள். அரசு மட்டுமில்லாமல் பல்வேறு தனியார் நிறுவனங்களும் தங்களது சக்திக்கேற்ப ஊழியர்களுக்கு விடுமுறை கொடுப்பார்கள். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் பனியன் தொழிலாளர்களுக்கு பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு 3 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.

திருப்பூர் மாவட்டம் பனியன் நிறுவன ஊழியர்களுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி 14ஆம் தேதி முதல் தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 19ஆம் தேதி முதல் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை தொடங்க உள்ளன.