பராமரிப்பு பணி காரணமாக 41 ரயில் சேவை ரத்து- மக்கள் அவதி
சென்னை கடற்கரை -தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 41 ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இன்று (ஜூலை 05) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை 41 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் தாம்பரம், பெருங்களத்தூர், பல்லாவரம் ரயில் நிலையங்களில் காலை 10.30 மணிக்கு முன்னதாகவே பயணிகள் குவிந்துள்ளனர். பயணிகளின் வசதிக்காக குறிப்பிட்ட நேர இடைவெளியில் 18 ரயில்கள் இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மிகவும் குறைவான ரயில்களே இயக்கப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இன்றும், ஜூலை 12ஆம் தேதியும் காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து குறைந்த அளவிலேயே பேருந்துகளும் இயக்கப்படுவதாக பயணிகள் புகார் கூறுகின்றனர்.
கடற்கரை நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருமால்பூர் வரை செல்லும் 20 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டு, தாம்பரம், காஞ்சிபுரத்தில் இருந்து கடற்கரை செல்லும் 21 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டதால் கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.