×

கொளுத்தும் வெயில் - ஹீட் ஸ்ட்ரோக்கால் ஒரே நாளில் 40 பேர் உயிரிழப்பு

 

தெலங்கானா மாநிலத்தில் வெயிலின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்தனர்.

தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் நிலவி வரும் கடும் வெப்ப அலையைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று வெப்பத்தாக்குதல் காரணமாக 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் மற்றும் தொழிலாளர்கள். சனிக்கிழமையன்று வெப்பநிலை சுட்டெரிக்கும் 46 டிகிரி செல்சியஸை எட்டியது. பதிவான 40 மரணங்களில் 30 பேர் தெலங்கானாவை சேர்ந்தவர்கள். வாரங்கல் மாவட்டத்தில் சுமார் 19 பேர் உயிரிழந்ததனர். நல்கொண்டா, கரீம்நகர் மற்றும் கம்மம் ஆகிய மாவட்டங்களில் தலா ஆறு பேரும், ஆதில்பாத்தில் இருவரும், நிஜாமாபாத்தில் ஒருவரும் உயிரிழந்தனர்.

ஆந்திரப் பிரதேசத்தில், விஜயவாடா நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் கடும் வெப்பம் காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் ஆவர். மீதமுள்ளவர்கள் வீடற்றவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மஹபூபாபாத்தில் உள்ள நீர்ப்பாசனத் துறை அலுவலகத்தில் ஒரு மரத்தில் வசித்து வந்த நூற்றுக்கணக்கான வௌவால்கள் வெப்பம் காரணமாக இறந்து கிடந்தன. நகராட்சி ஊழியர்கள் ஜேசிபி இயந்திரத்தைப் பயன்படுத்தி ஒரு குழி தோண்டி அந்த வௌவால்களைப் புதைத்தனர். கடும் வெப்பம் காரணமாக கால்நடைகளும் இறந்து வருகின்றன. மேடக் மாவட்டத்தில் வெப்பத்தாக்குதல் காரணமாக ஒரு காளை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.