×

பைக் ரேஸில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது - 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

 

சென்னை அண்ணா சதுக்கத்தில் பைக் ரேஸில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை பெருநகர் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் பைக் ரேஸ் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபடும் நபர்களை விரைந்து கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், போக்குவரத்து போலீசாருடன் இணைந்து, சட்டம் & ஒழுங்கு காவல் ஆளிநர்கள் மற்றும் ஆயுதப்படைக்காவலர்கள் அடங்கிய காவல் குழுவினர் நேப்பியர் பாலம் முதல் அடையார் திரு.வி.கா.பாலம் வரை, இராதாகிருஷ்ணன் சாலை, அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ECR, GST சாலை வண்ணாரப்பேட்டை மின்ட் மற்றும் வியாசர்பாடி, அம்பேத்கர் சாலை போன்ற முக்கிய சாலைகளில் தீவிரமாக கண்காணித்து, மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

D-6 அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கடந்த 29.04.2022 அன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் அண்ணாசாலை. தாராப்பூர் டவர் சிக்னல் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது. அங்கு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அபாயகரமாக இருசக்கரவாகனங்களை இயக்கி சாகசம் செய்த மணிகண்டன்,  ஹரிஹரன் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யபப்பட்டது.மேலும் போலீசார் விசாரணையில் பிடிபட்ட மணிகண்டன் மற்றும் ஹரிஹரன் அளித்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சஞ்சய் ஜான்ஜெபகுமார் ஆகிய இருவரையும் நேற்று (01.05.2022) கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 விலையுயர்ந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மேற்படி வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.விசாரணைக்குபின்னர் கைது செய்யப்பட்ட சஞ்சய், ஜான்ஜெபகுமார் ஆகிய இருவரும் நேற்று (01.5.2022) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன் உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை பெருநகர காவல் துறையினர் ஏற்கனவே தொடர்ந்து பைக் ரேஸில் ஈடுபடுவது குறித்து அடிக்கடி எச்சரிக்கை விடுத்தும். பைக் ரேஸில் ஈடுபட்ட நபர்களை கைது செய்தும், மேலும் இளைஞர்கள் மற்றும் இளஞ்சிறார்களின் பெற்றோர்களையும் வரவழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும். அபாயகரமாகவும் பைக் ரேஸ் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபட வேண்டாம் எனவும், மீறி பைக் ரேஸில் ஈடுபடும் நபர்கள் மற்றும் இளஞ்சிறார்கள் மீது சட்டபூர்வமாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.