×

நெல்லிக்காய் பறிக்க சென்ற 4 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி

 

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் நெல்லிக்காய் பறிக்க சென்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில்  மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்தவர் சண்முகம் என்பவரது மகன் கதிர் செல்வம்(4). இவரது உறவினர்களது குழந்தைகளான மணிமாரி, ஜோதி கருப்பசாமி ஆகிய சிறுவர்களுடன் விளையாடுவதற்காக கதிர் செல்வமும் அருகே உள்ள சாஸ்தா கோவில் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு, வயல்வெளியில் நெல்லிக்காய் கிடப்பதாக கூறி மூன்று பேரும் அதை பறிப்பதற்காக சென்றுள்ளனர். நெல்லிக்காய் பறிக்கச் சென்ற போது அதன் அருகே தண்ணீர் இருந்த கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக கதிர் செல்வம் விழுந்துள்ளார்.

இதனால் பதறிப்போன, உடன் வந்த இரண்டு சிறுவர்களும் அருகில் உள்ள வயலில் அறுவடை இயந்திரம் ஓட்டி வந்த டிரைவரிடம் நடந்த விபரத்தை கூறியுள்ளனர். அவரும் வேகமாக வந்து கிணற்றில் விழுந்த கதிர் செல்வத்தை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் கதிர் செல்வம் இறந்து கிணற்றில் பிணமாக மிதந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்துங்கநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதிர் செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாடச் சென்ற 4 வயது சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் செய்துங்கநல்லூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.