×

பள்ளியில் 4 வயது சிறுவன் திடீர் மரணம்! முகத்தில் வீக்கம்... நடந்தது என்ன?

 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி அருகே பள்ளியில் குழந்தை உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக குழந்தையின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆரணி - ஆற்காடு சாலையில் 5 மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.


ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே உள்ள தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் - தீபா இந்த தம்பதியருக்கு சன்விகா (8), மிதுன் (7) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த இரண்டு குழந்தைகளும் திமிரி அருகே உள்ள சின்ன உப்புபேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் யோகி வாமனா மெட்ரிகுலேஷன் என்கிற தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற இரண்டாம் வகுப்பு படித்து வந்த மிதுன் வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட கேக்கை உணவு இடைவெளியில் சாப்பிட்ட பிறகுமதியம் இட்லி சாப்பிட்டு உள்ளார். அதன்பின்னர் வகுப்பறையில் அமர்ந்து கொண்டிருந்த மிதுனின் முகம் திடீரென வீக்கம் காணப்பட்டதால் பள்ளி நிர்வாகம் சார்பில் திமிரி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை கொடுத்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். உடனடியாக தகவல் அறிந்த திமிரி காவல்துறையினர் குழந்தை இறப்பு தொடர்பாக பள்ளியில்  விசாரணை மேற்கொண்டதுடன். குழந்தையின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் குழந்தையின் பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில் குழந்தையின் சாவில் சந்தேகம் உள்ளதாக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஆரணி -  ஆற்காடு சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்து வந்த ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் இமயவர்மன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவரிடம் குழந்தையின் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பெற்றோர்கள் தரப்பில் பள்ளியில் இருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவினை (சிசிடிவி) காட்சிகளை காட்ட வேண்டும், பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்து பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும், பள்ளியை பூட்டி சீல் வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து கடந்த மூன்று மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் ஆற்காடு வட்டாட்சியர் செல்வி மகாலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.