×

ஒரே வாரத்தில் 4 கொடூரங்கள்..! – கொந்தளித்த தமிழிசை; ஸ்டாலின் அரசுக்கு விடுத்த அதிரடி எச்சரிக்கை!

 

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக வன்கொடுமை, சட்ட ஒழுங்கு குறைபாடு போன்றவற்றை கண்டித்து பாஜக சார்பில் இன்று (மார்ச் 16) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மகாலில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “தமிழ்நாட்டில் மனவேதனையான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. பெண் குழந்தைகள் கசக்கி வீசப்படுகிறார்கள். எந்த ஒரு சமுதாயத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லையோ, அந்த சமுதாயம் நிச்சயமாக பாராட்டப் படக்கூடிய சமுதாயம் அல்ல. ஆட்சியும் அப்படித்தான்.

தமிழ்நாட்டில் மிக மோசமான ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது. ஒரே வாரத்தில் 4 மிக மிக மோசமான சம்பவங்கள். மனசாட்சியை உலுக்குகின்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, விளாத்திகுளத்தில் மாணவிக்கு நடைபெற்ற சம்பவத்தை யாரும் மறக்க முடியாது, மன்னிக்கவும் முடியாது.


மு.க.ஸ்டாலின் அரசு ஒவ்வொரு தாய்க்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும். இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி திரும்பி வரவில்லை. காணாமல் போன மாணவி தொடர்பாக புகார் அளிக்க சென்ற போது அவரது பெற்றோர் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம் குறித்து விசாரிக்க சிபிஐ விசாரணை தேவை என அதிமுக சார்பில் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கவில்லை. நாளை தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. நான் திருநெல்வேலியில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். தமிழகத்தில் பொறுப்பு டிஜிபி தான் இருந்து கொண்டிருக்கிறார். ஆனால், உள்துறைச் செயலாளர் இருந்து கொண்டு குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாக பொய் சொல்கிறார்.

அதேசமயம் கனிமொழி எப்பொழுது விளாத்திகுளத்துக்கு நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்தார். அதன் பிறகு என்ன நடந்தது. அந்த குடும்பம் வெள்ளந்தி குடும்பம். பெண்களுக்கு பிரச்சனை என்றால் திமுக கூட்டணிக் கட்சிகள் எதுவும் கேட்பதில்லை. முதலமைச்சர் உடனே காவல்துறையை அழைத்து விசாரிக்க வேண்டும். அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டதா? ஆனால், டாஸ்மார்க் விற்பனைக்கு டார்கெட் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களுக்கு ஏன் தீவிர நடவடிக்கை இல்லை” என கேள்வி எழுப்பினார்.