×

"2 சிறுவர்கள் உட்பட நால்வர் கைது” - எஸ்ஐ பூமிநாதன் படுகொலையில் திடீர் திருப்பம்!

 

நேற்றைய தினம் சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் என்பவரை ஆடு திருடும் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது கொலைசெய்தவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். அதில் இருவர்கள் சிறுவர்கள் என்பது தான் நெஞ்சை உலுக்குகிறது. தஞ்சாவூர், புதுக்கோட்டையை சேர்ந்த 10 வயது, 17 வயது சிறுவர்கள், 19 வயது இளைஞர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆடு திருடி சென்றவர்களை துரத்திச் சென்று பள்ளத்துப்பட்டி ரயில்வே சுரங்கப்பாதை அருகே மடக்கிப் பிடித்துள்ளார். உடனே நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் மற்றொரு சிறப்பு உதவி ஆய்வாளர் சேகருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். மேலும் தான் இருக்கும் இடத்தையும் கூகுள் மேப்பாக ஷேர் செய்துள்ளார். இதனிடையே அதில் சிறுவன் ஒருவனின் தாயாரிடம், பூமிநாதன் 23 நிமிடங்கள் பேசியிருக்கிறார். சிறுவனின் விவரங்களையும் கேட்டறிந்துள்ளார். தற்போது இந்த உரையாடலை வைத்து தான் நால்வரையும் கைது செய்துள்ளனர் போலீஸார்.


 
விசாரணையில் தான் உண்மை தகவல் தெரியவரும் என்றும் கூறியுள்ளனர். திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு  உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பூமிநாதன். இவர் எல்லைக்குட்பட்ட பகுதியில் நீண்ட நாட்களாகவே ஆடுகளை மர்ம கும்பல் திருடி வந்துள்ளது. ஆகவே இதை தடுக்க திட்டமிட்டு, நேற்று முன்தின இரவு ஆடு திருடர்களை விரட்டிச் சென்று மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே பிடிக்க முயன்றுள்ளார். துணைக்கு போலீஸ் இல்லாமல் தனியாகச் சென்றுள்ளார். இதனை சாதகமாகப் பயன்படுத்தி அந்த திருட்டு கும்பல் கீரனூர் அருகே அதிகாலையில் பூமிநாதனை வெட்டி படுகொலை செய்தது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டனர். பூமிநாதன் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு சோழமாநகரில் காவல் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டத. கொலை கும்பலை கண்டுப்பிடிக்க  2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனால் வருத்தமுற்றதாக கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணமும், ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.