×

இலங்கை சிறையில் 38 தமிழக மீனவர்கள்! 269 படகுகளின் நிலை என்ன? சட்டப்பேரவையில் அமைச்சர் ஸ்ரீநாத் பதில்!

 

தமிழக மீனவர்களை மீட்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் என்ன? - அமைச்சர் ஸ்ரீநாத் அவையில் விளக்கம்

 பேரவையில் மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் பேசுகையில், "தமிழக மீனவர்கள் பாக் வளைகுடாவில் தங்களின் பாரம்பரிய கடற்பரப்பில் மீன் பிடிக்கும்போது சர்வதேச கடல் எல்லைக்கோட்டை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை அவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது.

2018 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தைச் சேர்ந்த 2,124 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 308 மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளது. இதில் 2,086 மீனவர்கள் மற்றும் 39 மீன்பிடி படகுகள் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகள் இலங்கை அரசால் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமரை சந்தித்து கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

இந்திய பிரதமர் அவர்களின் தலைமையில் கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொண்டு இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் மீனவ படகுகளை விடுவிக்கவும் அவற்றை மீட்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை மீட்பதற்கு தேவையான அனைத்து தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தியும் இந்திய இலங்கை மீன்வளத்திற்கான கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும்; இரு நாடுகளின் மீனவர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிரந்தர தீர்வை ஏற்படுத்த முதல்வர் பலமுறை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தற்போது வரை இலங்கை அரசின் காவலில் உள்ள ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் என மொத்தம் 38 மீனவர்கள் மற்றும் 269 படகுகளையும் மீட்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று அமைச்சர் ஸ்ரீநாத் கூறினார்.