×

மேல்மருவத்தூர் வந்துசென்ற 35 பக்தர்களுக்கு பாசிட்டிவ்... ஊழியர்கள் அனைவருக்கும் டெஸ்ட் எடுக்க உத்தரவு!

 

தமிழ்நாட்டிலுள்ள மாரியம்மன் கோயில்களிலேயே மிகவும் பிரசித்த பெற்றது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் தான். இங்கு தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அம்மனை தரிசித்துவிட்டு சொந்த ஊர் திரும்புவார்கள். இவ்வாறாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு, கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்திலிருந்து 3 பேருந்துகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வந்துள்ளனர்.

இதில் இரண்டு பேருந்துகள் இன்று கர்நாடகம் திரும்பின. அங்கு சென்று இறங்கியதும் அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  மேலும், ஒரு பேருந்து நாளை மண்டியா மாவட்டத்தை வந்தடையும் என்றும் அவர்களுக்கும் முழுமையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகளைப் பொறுத்து தனிமைப்படுத்தப்படுவர் என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ளதால், ஆதிபராசக்தி கோயிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். கோயில் வளாகத்தில் ஒவ்வொரு 1 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த கட்டுப்பாடுகளையும் மீறி கர்நாடகாவிலிருந்து வந்த பக்தர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக கோயில் ஊழியர்கள் அனைவருக்கும்  பரிசோதனை மேற்கொள்ள செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.