×

#BREAKING சர்ச்சையால் ரத்தான ரூ.33 லட்சம் டெண்டர் 

 

சென்னை அசோக் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு முன் பெயர் பலகை வைப்பதற்கான ரூ.33 லட்சம் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை அசோக் நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில்  22 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒவ்வொரு வீடுகளுக்கும் வீட்டின் நம்பர் பொருத்தும் பணிகளுக்காக 33 லட்சம் ரூபாய் செலவில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டர் நாளை கால அவகாசம் முடிவடைகிறது. ஆனால் நேற்று தான் டெண்டருக்கான தகவல்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் காண்ட்ராக்டர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

நேற்று முதல் காண்ட்ராக்டர்கள் பலர் விண்ணப்பிக்க முயற்சி செய்தும் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட காண்ட்ராக்டர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது குறிப்பிட்ட கான்ட்ராக்டர்கள் மட்டும்தான் இந்த டெண்டரில் விண்ணப்பிக்க முடியும் எனக் கூறியுள்ளார். அது எப்படி குறிப்பிட்டவர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும் என்று இருக்கும் என்று கேட்டதற்கு அதிகாரியும் முறையாக பதிலளிக்கவில்லை. தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற பிறகு டெண்டரில் வெளித்தன்மையும், யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்ற நிலையும் இருக்கும் என்று முதல்வர் விஜய் தெரிவித்து இருந்தார். ஆனால் காண்ட்ராக்டர்கள் யாரும் விண்ணப்பிக்க முடியாத நிலையை அதிகாரிகள் ஏற்படுத்தி உள்ளனர். குறைந்த லட்சம் மதிப்பு கொண்ட இந்த டெண்டர்களுக்கே அதிகாரிகள் இப்படி செய்தால் பெரிய அளவிலான டெண்டர்களை இவர்கள் வெளிப்படை தன்மையுடன் எப்படி செயல்படுவார்கள் என்ற கேள்வி காண்ட்ராக்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக காண்ட்ராக்டர் ஒருவர் அதிகாரியுடன் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சர்ச்சைக்குள்ளான சென்னை அசோக் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு முன் பெயர் பலகை வைப்பதற்கான ரூ.33 லட்சம் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெண்டரை சமர்பிக்க குறைந்த நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. அத்துடன் வீட்டு மனைகளாக வகை மாற்றம் செய்யும் கோப்புகளை கிடப்பில் போட்டுள்ளதாக கோவை கட்டுமான சங்கம் புகார் அளித்துள்ளது. வெளிப்படையான நிர்வாகம், அங்கீகாரம் என்ற அரசின் அறிவிப்புக்கு மாறாக அமைச்சர் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. முதல்வர் தலையிட்டு ஏதோ காரணங்களுக்காக தாமதம் செய்யப்படும் கோப்புகளுக்கு ஒப்புதல் தர ஆணையிடவும் கோவை கட்டுமான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.