மத்தியப் பிரதேசத்தில் பயங்கரம்: கோவில் கூரை இடிந்து விழுந்து 3 சிறுமிகள் பலி; 6 பேர் காயம்..!
மத்தியப் பிரதேச மாநிலம், மொரினா மாவட்டம் ரூலி பகுதியில் உள்ள அஹ்ரௌலி கிராமத்தில் புகழ்பெற்ற மாதா கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பழைய கூரையை இடித்துவிட்டு, அங்கு புதிய கோபுரம் கட்டும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 9) மதியம் 2 மணியளவில் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பழைய மேற்கூரை பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தின்போது கோவிலில் வழிபாட்டிற்காக வந்திருந்த பக்தர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அங்கிருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்தத் துயரமான சம்பவத்தில் வைஷ்ணவி (11), சாயா (7) மற்றும் கரிஷ்மா (9) ஆகிய மூன்று சிறுமிகள் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆறு பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட காவல்துறையினர், கட்டுமானப் பணியில் ஏதேனும் அஜாக்கிரதை இருந்ததா என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.