×

முதல்வர் டேபிளில் 3 பைல்-  ஓபன் செய்ய தயாராகும் முதல்வர் விஜய்

 

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது 3 துறைகளில் கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்த அறிக்கைகள் முதல்வர் விஜய்யின் டேபிளில் இருக்கிறது என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் திமுக மீதான குற்றச்சாட்டுகளுக்கு அக்கட்சியினர் ஆதாரம் கேட்டனர். அதற்கு கடந்த 19ம் தேதி சட்டசபையில் விஜய் பேசுகையில், நான் இதை சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆதாரம், ஆதாரம் என கேட்கிறார்கள். ஒரு வாரத்திற்கு முன் இங்கு நிதியமைச்சர் பேசிய போது 3 துறை தொடர்பான விவரங்கள் எனது மேஜையில் இருப்பதாக தெரிவித்திருந்தார். அவர் போகிற போக்கில் அதை சொல்லவில்லை. உண்மையிலேயே என் மேஜையில் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. அதை ஓபன் செய்துவிட வைத்துவிடாதீர்கள். மக்களிடம் எப்போது, எங்கே, என்ன பேச வேண்டும் என்றெல்லாம் பேசிவிட்டுதான் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். நான் பேசுவேன், பேசக் கூடாது என்றெல்லாம் இல்லை, இடைத்தேர்தலிலாவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் இல்லையா, அதனால்தான் அமைதியாக இருக்கிறேன். இவ்வாறு விஜய் தெரிவித்திருந்தார்.

இதிலிருந்தே தவெக, 7 தொகுதி இடைத்தேர்தலை குறி வைத்திருக்கிறது என்பது நன்றாக தெரிகிறது. இடைத்தேர்தல்கள் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்றாலும் இதில் வெல்ல வேண்டிய கட்டாயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அந்த ஊழல் ஃபைல்களை பொதுமக்களுக்கு வெளியிட்டு திமுகவின் இமேஜ் சரியும், தவெகவின் செல்வாக்கு அதிகரிக்கும் என விஜய் கணக்கு போட்டுள்ளார்.