ஒரே தேதியில் பிறந்த 3 குழந்தைகள் - உலக சாதனை!
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தம்பதிக்கு வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த 3 குழந்தைகளுமே ஒரே தேதியில் பிறந்துள்ளனர். இது உண்மையில் மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், அந்த 3 குழந்தைகள் பிறக்கும் போதும் ஒரே மருத்துவர் தான் பிரசவம் பார்த்து இருக்கிறார். மேலும், அந்த மருத்துவரின் பிறந்த தேதியும் அதே நாள் என்பது இங்கு அதிசயமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. மெடிக்கல் மிராக்கில் என்ற வார்த்தைக்கு பொருத்தமான நிகழ்வு என்றே சொல்லலாம்.
பாளையங்கோட்டையை சேர்ந்தவர் ஜெபர்சன். இவர் மதபோதகராக உள்ளார். இவரது மனைவி சீபா மனோஸ். இந்த தம்பதிக்கு ஜஹஸ்லேல் மனோஸ், ஜசானியா ஷரோன் மற்றும் ஜானியா செராபின் ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
இவரது மூத்த மகன் 2015-ம் ஆண்டும், 2-வது மகள் 2017-ம் ஆண்டும், 3-வது மகள் 2025-ம் ஆண்டுகளிலும் பிறந்தனர். இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால் 3 குழந்தைகளும் ஜூன் 10-ந் தேதியன்று பிறந்துள்ளனர். இவர்களின் பிறப்பில் இன்னொரு வியப்பூட்டும் ஒற்றுமையும் உள்ளது. 3 பேரும் பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் உள்ள ஒரே தனியார் நர்சிங் ஹோமில் பிறந்துள்ளனர். இந்த 3 குழந்தைகளின் பிரசவத்தையும் பார்த்த டாக்டர் ரமோலாஜேனட் டயானாவும் ஜூன் 10-ந் தேதியே பிறந்தவர் என்பது கூடுதல் சுவாரசியம்.
கால இடைவெளி 10 ஆண்டுகள் இருந்தாலும், டாக்டர், மருத்துவமனை மற்றும் பிறந்த நாள் ஆகிய மூன்றும் மாறாமல் இருப்பது அபூர்வ நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த அபூர்வ நிகழ்வை உலக சாதனையாக பதிவு செய்ய யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பியூச்சர் கலாம்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்புகளிடம் விண்ணப்பிக்கப்பட்டது.
ஆவணங்களை ஆய்வு செய்த அமைப்புகள், "ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அதிகபட்ச உடன்பிறப்புகள் ஒரே நாளில், ஒரே மருத்துவமனையில், ஒரே மருத்துவரால் சுகப்பிரசவம் மூலம் பிறந்து சாதனை" என்ற தலைப்பில் உலக சாதனைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளன. இதற்கான நேரடி உறுதிப்படுத்துதல் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி வருகிற 15-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.