×

ராஜினாமா கடிதம் கொடுத்த கையோடு ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து தவெகவில் இணைந்த எம்எல்ஏக்கள்!

 

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ராஜினாமா செய்தனர். அவர்கள் 3 பேரும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.


முதல்வர் விஜயின் ஆட்சிக்கு ஆதரவு வழங்கி சட்டமன்றத்தில் வாக்களித்த சிவி சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகிய மூவரும் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா செய்த கையோடு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்து கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த மூன்று தொகுதிகளுடன் சேர்த்து ஏற்கனவே முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதிக்கும் சேர்த்து நான்கு தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி அணி, சிவி சண்முகம் எஸ் பி வேலுமணி அணி என இரண்டு அணிகள் இருந்த நிலையில் சிவி சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்கள் மூன்று பேர் அக்கட்சியை விட்டு விலகியுள்ளனர்.


எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் 22 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே இருந்த நிலையில் சிவி சண்முகம் ஆதரவு 4 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதனை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. இதனை அடுத்து சிவி சண்முகம் தரப்பு ஆதரவு எம் எல் ஏக்கள் எண்ணிக்கை 17 ஆக குறைந்தது.