×

மதுரையில் தவெக 2ஆவது மாநாடு- நாளை பூமி பூஜை

 

தவெகவின் 2வது மாநாடு மதுரையில் உள்ள கூடக்கோவில் பகுதியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. அரசியல் கட்சிகள் கூட்டணிக் கணக்கு பேச்சுவார்த்தைகளை தொடங்கி தேர்தல் வியூகங்களை தீவிரப்படுத்தியுள்ளன. ஆளும் திமுக தங்களது 4 ஆண்டு ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சியின் குறைபாடு, சட்டம் - ஒழுங்கு போன்ற பிரச்சினைகள் மற்றும் பல்வேறு விமர்சனங்களையும் மக்களிடம் சென்றடைய செய்கின்றனர். அந்த வகையில் தேர்தல் நேரம் நெருங்குவதால் தென் மாவட்டங்களை மையமாக வைத்து திமுக மதுரையில் தங்களது கட்சியின் மாநில பொதுக் குழுக் கூட்டத்தை மதுரை உத்தங்குடி பகுதியில் ஜூன் 1-ம் தேதி நடத்தியது. இதற்குப் போட்டியாக ஒத்தக்கடை பகுதியில் மையக்குழு நிர்வாகிகள் ஆலோசனை என்ற பெயரில் மாநாடு போன்ற ஒரு கூட்டத்தை மத்திய அமைச்சர் அமித் ஷாவை பங்கேற்கச் செய்து பாஜக நடத்தியது. அதன்பின் தன்பின், இந்து முன்னணி சார்பில் ஜூன் 22-ல் முருக பக்தர் மாநாடு நடத்தினர். தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சார்பில் ‘ஆடு, மாடுகள் மாநாடு’ என்ற பெயரில் மதுரை விராதனூர் பகுதியில் ஜூலை 10 ஆம் தேதி சீமான் மாநாடு நடத்தினார்.

இந்நிலையில் கடந்த ஓன்றரை ஆண்டுக்கு முன்பு புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தென் மாவட்டங் களை மையப்படுத்தி பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. அதுவும் மதுரையில் நடத்தவுள்ளது. மதுரை கூடக்கோயிலில் தவெகவின் மாநாட்டிற்காக பொதுச் செயலாளர் புஸ்சிஆனந்த் தலைமையில் நாளை அதிகாலை பூமி பூஜை நடைபெறவுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்று அடைந்தார் தவெக பொதுச் செயலாளர் புஸ்சிஆனந்த். மதுரை அடுத்த ஆவியூர் பகுதியில் பிரம்மாண்டமாக மாநாடு நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மதுரை வந்த ஆனந்த் மாவட்ட எஸ்பி அலுவலகம் அல்லது மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்துக்குச் சென்று மாநாட்டிற்கான அனுமதி குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேச இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக தவெகவின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது குறிப்பிடதக்கது.