தி.மு.க நிர்வாகியின் ஜவுளிக்கடை கிடங்கில் 2,800 வேட்டி, சேலைகளை பறிமுதல்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சுமார் ஐந்து லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2800 வேஷ்டி சேலைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காந்திபுரம் என்ற பகுதியில் ஸ்ரீ டெக்ஸ்டைல் என்ற ஜவுளி நிறுவனத்தை திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தங்கமணி என்பவர் நடத்தி வருகிறார். திமுக சார்ந்த டி-ஷர்ட் ,சட்டைகள், வேஷ்டி, சேலைகள் ஆகியவற்றை கட்சி நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கும்,ஆர்டரின் பெயரிலும் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பது இவருடைய வழக்கம். இந்நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பட்டுப்புடவைகள் சேலைகள் ஆகியவை ஜவுளி கடையில் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை பிரிவு அதிகாரி தங்கதுரை தலைமையிலான போலீசார் ஜவுளி கடைக்குள் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது கடையில் இருந்த உரிமையாளரின் தந்தையிடம் இந்த ஜவுளிகளுக்கு உரிய ரசீது உள்ளதா என கேட்டுள்ளனர். அப்பொழுது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிக்கவே உடனடியாக அதிகாரிகள் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஜவுளிகளை பண்டலாக கட்டி வட்டாச்சியர் அலுவலத்திற்கு கொண்டு செல்வதற்கு ஈச்சர் வாகனத்தில் ஏற்றினர். இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த ஜவுளி கடையின் உரிமையாளர் தங்கமணி, திமுக நகர மன்ற துணைத் தலைவர் பாலமுருகன், திமுக நகர செயலாளர் குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் முறையான ரசீது வைத்து வியாபாரம் செய்வதாகவும், தற்போது புதிதாக வந்துள்ள வேஷ்டி சேலைகளும் கடந்த 15 நாட்களுக்கு முன்பாகவே ஆர்டர்கள் போடப்பட்டு தற்போது வந்திருப்பதாகவும், தொழில் ரீதியாக இதை செய்வதாகவும், வாக்காளர்களுக்கு வழங்கவில்லை எனவும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதனை ஏற்காத அதிகாரிகள் எங்களுக்கு புகார் வந்துள்ளதால் நாங்கள் இதை பறிமுதல் செய்தே ஆக வேண்டும் எதுவாக இருந்தாலும் உரிய ரசீதை காட்டி உங்களுடைய பொருட்களை பெற்றுச் செல்லலாம் என கூறினர். இதனை அடுத்து உடனடியாக பறிமுதல் செய்யப்பட்ட ஜவுளிகள் அனைத்தையும் உரிய ஆவணங்களை காட்டி பெற்றுச் செல்லலாம் என அதிகாரிகள் வசம் அவர்களிடம் தெரிவித்து விட்டு, சுமார் 2,800 வேஷ்டி சேலைகள் அடங்கிய ஜவுளிகள் ஈச்சர் லாரி மூலமாக பாதுகாப்புடன் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.