தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் 27 முக்கிய வாக்குறுதிகள்..!
'புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி - 2026' என்ற தலைப்பில் மொத்தம் 114 பக்கங்களுடன் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைகளை குறிவைத்து வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு; சமூக நீதி, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு; இளைஞர்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு; விவசாயிகளும் விவசாயமும்; மீனவர்களும் மீன்வளமும்; அனைவருக்கும் ஆரோக்கியம்; தமிழ் கலாச்சாரமும் சுற்றுலாத்துறையும்; பொருளாதாரமும் தொழில்துறையும், உட்கட்டமைப்பு; நீர் வளம் மற்றும் சுற்றுச்சூழல்; சென்னை பகுதி; கொங்குப் பகுதி; தெற்குப் பகுதி; வடக்குப் பகுதி; டெல்டா பகுதி என 16 தலைப்புகளின் கீழ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பாஜக அதன் 27 முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த உடன், இந்த வாக்குறுதிகள் அனைத்தும் திட்டமிட்ட முறையில் செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொன்றும் காலக்கெடுவில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்துள்ளது.
பாஜகவின் 27 முக்கிய வாக்குறுதிகள்
1. குடும்பத் தலைவிகளுக்கு நிதியுதவி: தமிழ்நாடு குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும். ஒருமுறை நிதியுதவியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 வழங்கப்படும்.
2. விலையில்லா சிலிண்டர்கள்: பொங்கல், தமிழ் புத்தாண்டு, தீபாவளி என ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.
3. பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு: 'ஜீரோ-எப்ஐஆர்' (Zero-FIR) முறை, சாட்சியாளர் பாதுகாப்பு, போக்சோ குற்றங்களுக்குச் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள், கல்வி நிலையங்கள்/பேருந்துகளில் 100% சிசிடிவி கண்காணிப்பு உறுதி செய்யப்படும்.
4. பெண்களுக்கு வட்டியில்லா கடன்: பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு உற்பத்தி அலகுகளை அமைக்க ரூ.50 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். அரசின் கொள்முதலில் பெண்களுக்கு 20% இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.
5. தைப்பூச மாநில விழா: தைப்பூசத் திருநாள் மாநில விழாவாக அறிவிக்கப்படும்.
6. திருப்பரங்குன்ற தீபம்: திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியம் மீண்டும் தொடங்கப்பட்டுப் பாதுகாக்கப்படும்.
7. போதைப்பொருள் ஒழிப்பு: 'தமிழக போதைப்பொருள் ஒழிப்புத் துறை' உருவாக்கப்படும். போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு மரண தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
8. விவசாயிகளுக்கு நிதியுதவி: 'உழவே தலை' திட்டத்தின் கீழ் பிஎம்-கிசான் நிதியுடன் சேர்த்து ஆண்டுக்கு மொத்தம் ரூ. 9,000 நிதியுதவி வழங்கப்படும்.
9. சேமிப்புக் கிடங்குகள்: பஞ்சாயத்து அளவில் தானியங்களுக்காகச் சிறிய எஃகு சேமிப்புக் கிடங்குகளும் (Steel Silos), பழங்கள் / மலர்களுக்காகக் குளிர்பதனக் கிடங்குகளும் அமைக்கப்படும்.
10. உழவர் உறுதுணைத் திட்டம்: சிறு/குறு விவசாயிகள் கால்நடை, இறால், தேனீ வளர்ப்பைத் தொடங்க ஒருமுறை நிதியுதவியாக ரூ. 50,000 வழங்கப்படும்.
11. மீனவர் நலன்: மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.12 ஆயிரமாகவும், 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியமும் வழங்கப்படும்.
12. மாணவர் கடன் தள்ளுபடி: முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ரூ.10 லட்சம் வட்டியில்லா கடன், வேலைவாய்ப்பின்மை காரணமாக மாதத் தவணை செலுத்த முடியாதவர்களுக்குக் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
13. தூய்மையான நகரங்கள்: தமிழ்நாட்டின் 10 நகரங்களை இந்தியாவின் முதல் 100 தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம்பெறச் செய்வோம்.
14. செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி: 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வட்டார வள மையங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபாட்டிக்ஸ் பயிற்சிகள் வழங்கப்படும்.
15. இளைஞர் தொழில்முனைவோர்: முதன்முறை தொழில் தொடங்கும் 2,000 இளைஞர்களுக்கு ரூ.15 லட்சம் வரை வட்டியில்லா கடன் மற்றும் ஜிஎஸ்டி சலுகைகள் வழங்கப்படும்.
16. மின்சார ஸ்கூட்டர் மானியம்: தகுதியுள்ள பெண்களுக்கு மின்சார இருசக்கர வாகனங்கள் (e-scooters) வாங்க ரூ.25,000 மானியம் வழங்கப்படும்.
17. திருக்கோவில் நித்ய பூஜை திட்டம்: கோவில்களுக்கு மாதம் அத்தியாவசியப் பொருட்கள் தொகுப்பு மற்றும் பராமரிப்பிற்காக ஆண்டுக்கு ரூ.25,000 நிதியுதவி வழங்கப்படும்.
18. தொழிற்பூங்காக்கள்: மத்திய அரசின் BHAVYA திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 10 'பிளக்-அண்ட்-பிளே' (Plug-and-Play) தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.
19. கிக் தொழிலாளர் பாதுகாப்பு: கிக் தொழிலாளர்களுக்கு (Rapido, Swiggy டெலிவரி ஊழியர்கள்) மாதம் ரூ.1,500 எரிபொருள் மானியம் மற்றும் விபத்துக் காப்பீடு ₹10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
20. மாவட்ட மருத்துவமனை மேம்பாடு: கூடுதல் ஆம்புலன்ஸ்கள், இலவச டயாலிசிஸ் மையங்கள், தாய்ப்பால் வங்கிகள் மற்றும் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (PICU) அமைக்கப்படும்.
21. முதியோர் உடல்நலப் பரிசோதனை: 65 வயதிற்கு மேற்பட்டோருக்கு இல்லத்திற்கே சென்று இலவசப் பரிசோதனை செய்யப்படும். இருசக்கர ஆம்புலன்ஸ்கள் 50 ஆக உயர்த்தப்படும்.
22. ரயில்வே கட்டமைப்பு: சென்னை-பெங்களூரு/ஹைதராபாத் இடையே அதிவேக இரயில் வழித்தடங்கள் மற்றும் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
23. திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகம்: நவீன தொழில்நுட்பப் பாடத்திட்டங்களை வழங்கும் தமிழ்நாடு மாநில திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகம் நிறுவப்படும்.
24. கடல்நீர் சுத்திகரிப்பு: தமிழகத்தை இந்தியாவின் கடல்நீர் சுத்திகரிப்புத் தலைநகராக மாற்றி, கூடுதலாக 500 MLD திறன் கொண்ட ஆலைகள் அமைக்கப்படும்.
25. சூரிய சக்தி மானியம்: பி.எம். சூர்ய கர் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு மாநில அரசின் கூடுதல் ஊக்கத்தொகையாக ரூ.25,000 வழங்கப்படும்.
26. சுற்றுலா மேம்பாடு: கடல், மலை, காடு மற்றும் ஆன்மிகச் சுற்றுலாத் திட்டங்களுடன் 'தமிழக கிராம தெய்வங்கள் சங்கமம்' நிகழ்ச்சி நடத்தப்படும்.
27. தென் தமிழகத் திருத்தல யாத்திரை: தென் மாவட்டக் கோவில்களில் உள்ளூர் மக்களுக்காக நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் பிரத்யேக தரிசன நேரம் ஒதுக்கப்படும்.