×

எனது நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தவர் ஈச்சங்காடு சண்முகம்…ராமதாஸ் உருக்கம்

கடலூர் மாவட்டம் ஈச்சங்காட்டைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொடக்க கால செயல்வீரர்களில் ஒருவரான மாநிலத் துணைத் தலைவர் ஈச்சங்காடு சண்முகம் உடல்நலக் குறைவால் காலமானார். ஈச்சங்காடு சண்முகம் மறைந்த செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். ஈச்சங்காடு சண்முகம் குறித்த நினைவுகளை உருக்கமுடன் தெரிவித்திருக்கிறார் ராமதாஸ். அவர் 42 ஆண்டுகளுக்கு முன் எனக்கு அறிமுகமானவர். அன்று தொடங்கி தமது இறுதி மூச்சு வரை எந்தவித சலனமும்
 

கடலூர் மாவட்டம் ஈச்சங்காட்டைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொடக்க கால செயல்வீரர்களில் ஒருவரான மாநிலத் துணைத் தலைவர் ஈச்சங்காடு சண்முகம் உடல்நலக் குறைவால் காலமானார். ஈச்சங்காடு சண்முகம் மறைந்த செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

ஈச்சங்காடு சண்முகம் குறித்த நினைவுகளை உருக்கமுடன் தெரிவித்திருக்கிறார் ராமதாஸ். அவர் 42 ஆண்டுகளுக்கு முன் எனக்கு அறிமுகமானவர். அன்று தொடங்கி தமது இறுதி மூச்சு வரை எந்தவித சலனமும் இல்லாமல் பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்தவர். வன்னியர் சங்க காலம் முதல் தீவிர இயக்கப் பணியாற்றியவர். சங்கம் மற்றும் கட்சியின் தொடக்கக் காலத்தில் எனது ஆணையை ஏற்று இயக்கப் பணிகளுக்காக பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் செய்தவர் சண்முகம் என்று சொல்லும் ராமதாஸ்,

எனது நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தவர் அவர். வன்னியர் சங்கத்தில் பல்வேறு பதவிகளை வகித்த ஈச்சங்காடு சண்முகம் , பாட்டாளி மக்கள் கட்சியில் ஒன்றிய செயலாளர் நிலையில் தொடங்கி கடலூர் ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவர், ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர், மாநில துணைப் பொதுச்செயலாளர், மாநில துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். 1980களில் நடத்தப்பட்ட இட ஒதுக்கீட்டுப் போராட்டம் முதல் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்ட இட ஒதுக்கீட்டுப் போராட்டம் வரை அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு பல முறை சிறை சென்றவர். கட்சிக்காகவும், சமுதாயத்திற்காகவும் உழைக்கவும், தியாகங்களை செய்யவும் ஒரு போதும் தயங்காத தொண்டர் என்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிறப்பான சிகிச்சை கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டோம். அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து விசாரித்து வந்தேன். விரைவில் அவர் நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தான் சண்முகம் காலமான செய்தி நம்மை தாக்கியிருக்கிறது என்றும் வருந்தும் ராமதாஸ்,

சண்முகத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், கடலூர் மாவட்ட பாமகவினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.