×

முகமாக, முகவரியாக மாறி இருக்கிற… சீமான் புகழாரம்

கரிசல் இலக்கியத் தந்தை எனப் போற்றப்படும் இலக்கிய ஆளுமை ஐயா கி.ரா.வின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கே ஏற்பட்ட பேரிழப்பு என்று மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழாரம் சூட்டியுள்ளார். கி.ராவின் மறைவு குறித்து சீமான் மேலும், நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரும், கரிசல் இலக்கிய வகைமையின் தந்தையும், மூத்த இலக்கிய ஆளுமையுமான ஐயா கி.ராஜநாராயணன்அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன். அவரை இழந்து
 

கரிசல் இலக்கியத் தந்தை எனப் போற்றப்படும் இலக்கிய ஆளுமை ஐயா கி.ரா.வின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கே ஏற்பட்ட பேரிழப்பு என்று மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழாரம் சூட்டியுள்ளார்.

கி.ராவின் மறைவு குறித்து சீமான் மேலும், நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரும், கரிசல் இலக்கிய வகைமையின் தந்தையும், மூத்த இலக்கிய ஆளுமையுமான ஐயா கி.ராஜநாராயணன்அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், இலக்கிய வட்டத்திற்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, அத்துயரில் பங்கெடுக்கிறேன் என்கிறார்.

தன் இறுதி மூச்சை சுவாசிக்கும் நொடிவரை எழுத்துலகில் பெருமைமிக்கப் பங்களிப்புகளைச் செய்து வந்த ஐயா கி.ரா அவர்கள், கரிசல் நிலத்துப்பண்பாட்டு விழுமியங்களை, கரிசல் நிலத்தின் எளிய மனிதர்களை ஒப்பற்றத் தனது படைப்புகள் மூலமாக இலக்கிய ஆவணங்களாக செதுக்கி வைத்த பெரும்பணியைச் செய்தவராவார் என்று சொல்லும் சீமான், அவர் எழுதிய ‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்லபுரத்து மக்கள்’, ’அந்தமான் நாயக்கர்’ போன்ற பல படைப்புகள் கரிசல் நிலத்தின் எளிய மனிதர்களைப் பற்றிய இலக்கிய மேதமையும், எளிமையும் ஒருங்கே அமைந்த நவீன இலக்கிய உலகின் தனித்துவ அடையாளங்களாகும். நாவல் மட்டுமன்றி, ‘கதவு’ போன்ற புகழ்பெற்ற சிறுகதைகளை எழுதியதோடு மட்டுமல்லாது, ‘கரிசல் வட்டார வழக்கு அகராதி’ என்பதைத் தமிழில் முதன்முதலாக உருவாக்கி, கரிசல் நிலத்தின் வளமையான சொற்கூட்டத்தைச் சேகரித்து ஆவணப்படுத்தியவராவார்.

அவர் தொகுத்த ‘நாட்டுப்புறக்கதைக் களஞ்சியம்’ தமிழ் இலக்கிய உலகிற்கு அவர் அளித்த மற்றுமொரு கொடை எனலாம். 1991ஆம் ஆண்டு ‘கோபல்லபுரத்து மக்கள்’ எனும் நூலுக்காகச் சாகித்ய அகாதமி விருதுபெற்று தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்தவராவார் என்று குறிப்பிடுகிறார்.

ஒப்பற்ற இலக்கியப் பெருவாழ்வினை வாழ்ந்து, தமிழின் பெருமைமிக்க இலக்கிய அடையாளமாக, கரிசல் நில இலக்கியத்தின் முகமாக, முகவரியாக மாறி இருக்கிற ‘கரிசல் இலக்கியத் தந்தை’ ஐயா கி. ராஜநாராயணன் அவர்களது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கே ஏற்பட்டிருக்கிற ஈடு செய்ய இயலாதப் பேரிழப்பாகும். அவர் மண்ணைவிட்டு மறைந்தாலும் தனது மகத்தான படைப்புகள் வாயிலாக என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுதானிருப்பார் என்கிறார் உருக்கமுடன்.