சூடு பிடிக்கும் தேர்தல் களம் : சென்னையில் பாதுகாப்பு பணியில் 22,000 போலீசார்..!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 23ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்தது. இதில் 85.10 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
இதையடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் மேற்பார்வையில், இணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், துணை ஆணையாளர்கள் தலைமையில் 3 வாக்கு எண்ணும் மையங்களிலும், 4 அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, சென்னை காவல் ஆணையாளர் அபின் தினேஷ் மோதக், உத்தரவின் பேரில், திங்கட்கிழமை (மே 4) வாக்கு எண்ணும் நாளன்று, சென்னை முழுவதும் கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள், சிறப்பு காவல் படை, ஆயுதப்படை, மத்திய ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த காவலர்கள் உள்பட சுமார் 22,000 காவல்துறையினர் 3 வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் சென்னை பெருநகர் காவல் எல்லை முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கடுமையான கட்டுப்பாடுகள்
இந்தியத் தேர்தல் ஆணையம், மாவட்டத் தேர்தல் அதிகாரி அல்லது தேர்தல் அதிகாரியால் முறையாக வழங்கப்பட்ட, செல்லுபடியாகும் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் யாரும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
நுழைவை ஒழுங்குபடுத்துவதற்கும், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவாயிலிலும் உயர் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஊடகத்தினர் கேமராக்கள் அல்லது வீடியோ கேமராக்களை வாக்கு எண்ணும் மையத்திற்குள் கொண்டு செல்லக்கூடாது. இருப்பினும், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் அங்கீகார அட்டைகளைக் (Valid Authorization Passes) கொண்ட ஊடகத்தினர் கையடக்கக் புகைப்பட கேமராக்கள் மற்றும் வீடியோ கேமராக்களுடன் வாக்கு எண்ணும் மையங்களில் குறிப்பிட்ட எல்லை வரை அனுமதிக்கப்படுவர்.
தேர்தல் பார்வையாளரைத் தவிர வேறு யாரும் வாக்கு எண்ணும் கூடத்திற்குள் கைப்பேசியைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், கூர்மையான பொருட்கள், தீக்குச்சிகள், கம்பிகள், லைட்டர்கள், வெடிபொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், தடைசெய்யப்பட்ட பொருட்களான மண்ணெண்ணெய், கைபேசிகள், கேமராக்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்கள் போன்றவற்றை வாக்கு எண்ணும் மையத்திற்குள் யாரும் கொண்டு வர அனுமதியில்லை.
தனிநபர்கள், உள் மற்றும் வெளிப் பாதுகாப்பு வளையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் குடிநீர் பருக வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், அவர்கள் மீண்டும் உள்ளே நுழையும்போது நுழைவாயிலில் முழுமையாகச் சோதனையிடப்படுவார்கள்.
பலமுறை நுழைவதற்கான அனுமதிச் சீட்டு இல்லாமல் வெளிப் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி வெளியே செல்லும் எவரும், மீண்டும் உள்ளே நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். முகவர்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறியவுடன், அவர்கள் மீண்டும் உள்ளே நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
குடிபோதையில் இருக்கும் நபர்கள் யாரும் வாக்கு எண்ணும் மைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என இவ்வாறு தெரிவித்துள்ளனர்.