7 பேருக்கு மறுவாழ்வு அளித்த 22 வயது இளைஞர்- தவறி கீழே விழுந்ததால் மூளைச்சாவு
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கீழே தவறி விழுந்து மூளை சாவு ஏற்பட்ட 22 வயது இளைஞர் 7 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் - விஜயகுமாரி தம்பதி மகன் மோனிக்ராஜ் (22). விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரவு விவசாயத்திற்காக இயக்கப்பட்ட மின் மீட்டரை நிறுத்தச் சென்றார். அப்போது திடிரென அவர் அணிந்திருந்த மப்ளர் மோட்டாரில் சிக்கி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். தொடர் சிகிச்சையில் இருந்த மோனிக்ராஜூக்கு இன்று காலை மூளைச் சாவு ஏற்பட்டது. இதனால் மோனிக்ராஜ் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன் வந்தனர்.
இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் மோனிக்ராஜ் இருதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், கண்கள் ஆகிய உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, விமானம் மூலம் இருதயம் சென்னை தனியார் மருத்துவமனைக்கு, இதர உடல் உறுப்புகள் பிற மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து உடல் உறுப்பு தானம் செய்த மோனிக்ராஜ் உடலுக்கு வட்டாச்சியர் முன்னிலையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர்