×

216 பக்கம்..! முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்..

 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.  

அதிமுக ஆட்சியில்   சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையால் புதுக்கோட்டை நீதிமன்றத்தில்   இன்று காலை காலை 10 மணியளவில குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை நீதிபதி ஜெயந்தியிடம் ,  லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. இமயவரம்பம், இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், பீட்டர் ஆகியோர் தாக்கல் செய்தனர்.  முன்னதாக விஜயபாஸ்கர் திருவள்ளூர் அருகே மஞ்சக்கரணையில் மருத்துவக் கல்லூரி அமைக்க லஞ்சம் பெற்றுக்கொண்டு  முறைகேடாக சான்றிதழ் வழங்கியதாக புகார் எழுந்தது.  இதுகுறித்து  கடந்த 2021ம் ஆண்டு புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து அவருடைய வீடு மற்றும் அலுவலகங்கள், குவாரிகள்,  உறவினர்கள் வீடு  என 56 இடங்களில்  அதிரடியாக சோதனை நடத்தினர்.  இதில் வருமானத்திற்கு அதிகமாக 55% கூடுதலாக  சொத்து சேர்த்ததாக  விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டது. தக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில்   ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 சொத்து சேர்த்ததும்,  சோதனையில் ரூ.23 லட்சம் பணம், 4.87 கிலோ தங்கம், 136 ஹார்டு டிஸ்க்குகள், கனரக வாகனங்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.