×

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரே நாளில் 2094 வழக்குகள் பதிவு

 


சென்னையில் நேற்று போக்குவரத்து காவல் துறை சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு வாகன தணிக்கையில், போக்குவரத்து விதிகளை மீறியதாக 2094 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை பெருநகரில் போக்குவரத்து விதிகளை அமல்படுத்தும் வகையில், போக்குவரத்து காவல் துறையினர் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், விபத்துகளை குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள் தவறான வழியில் வாகனங்களை ஓட்டுவது. அதிக வேகமாக வாகனம் ஓட்டி மற்ற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து விளைவிப்பது மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பது போன்ற போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த நேற்று (27.04.2022) சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது.

இந்த தணிக்கையில், தவறான வழியில் வாகனம் ஓட்டியதற்காக 1,595 வழக்குகளும், வேகமாக வாகனம் ஓட்டியதற்காக 96 வழக்குகளும், அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதற்காக 403 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சிறப்பு தணிக்கை தொடர்ந்து நடத்தப்படும், அனைத்து வாகன ஓட்டிகளும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.