"201 சமூக ஊடகப் பதிவுகள் நீக்கம்!" – கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது வழக்கில் தமிழகக் காவல்துறை அதிரடி அறிக்கை!
தமிழக போலீசார் எக்ஸ் வலை தள பதிவில் அறிக்கை வெளியிட்டு இருக்கின்றனர்.
அதன் விவரம் வருமாறு;
நவ.23ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பெண் அதிகாரி, எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது துன்புறுத்தல் மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பாக புகார் அளித்தார். இதன் அடிப்படையில், அதே நாளில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 91/2026ன் கீழ் உரிய சட்டப்பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தொடக்கத்தில் உள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சென்னை உயர் நீதிமன்றம் நவ.24ம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரிஷ்டி சிங், சென்னை நிர்வாகப் பிரிவு காவல்துறைத் தலைவர் காமினி மேற்பார்வையில் இவ்வழக்கின் விசாரணையை மேற்கொண்டார்.
விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் பிற சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, உள்ளூர் காவல்துறையினர் மற்றும் தமிழக காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவினர் இணைந்து இதுவரை 201 சமூக ஊடகப் பதிவுகளை நீக்கியுள்ளனர். மேலும், POSH சட்டத்தின் கீழ் வரும் விவரங்கள் தொடர்பாக எந்தவொரு தகவலையும் வெளியிடவோ, பகிரவோ அல்லது பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தவோ கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே, நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவுக்கு முரணாக எந்தவொரு பதிவையும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு தமிழக போலீசார் கூறி உள்ளனர்.