×

"தமிழகத்தில் 2031-க்குள் 20,000 பொது எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்கள்"- தவெக அரசு திட்டம்

 

தமிழகத்தில் மின் வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.


இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் "வெற்றி தமிழகம்" தொலைநோக்குப் பார்வையின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக, 2031-ஆம் ஆண்டிற்குள் மாநிலம் முழுவதும் 20,000 பொது மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு பல்வேறு கொள்கை சார்ந்த முன்னெடுப்புகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.மின்சார வாகன பயன்பாட்டை அதிகரித்தல், தனியார் முதலீடுகளை ஊக்குவித்தல், ஆரம்ப முதலீட்டு தடைகளை குறைத்தல் மற்றும் உலகத் தரத்திலான EV சார்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம், நிலையாக போக்குவரத்து துறையில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உருவாக்குவதே அரசின் நோக்கமாகும். இதனை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாநிலத்தில் பொதுப் பயன்பாட்டு மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களின் தற்போதைய நிலையை ஆய்வு செய்வதற்கான உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் 13.07.2026 அன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, தலைமைச் செயலாளர் அவர்கள் வழங்கிய அறிவுறுத்தலின்படி, 14.07.2026 அன்று தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் (TNPDCL) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அவர்கள் தலைமையில், ITDP India மற்றும் Guidance Tamil Nadu அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் உயர்மட்ட தொழில்நுட்பக் குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத்தில் மின்வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்துவதற்கான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு, பின்வரும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

தற்போதுள்ள உயரழுத்த/அதிஉயரழுத்த HT/EHT மின் இணைப்புகளில் துணை மின் மீட்டர் (EV Sub-meter ) வசதி

தற்போதுள்ள உயரழுத்த/அதிஉயரழுத்த (HT/EHT) மின் இணைப்புகளின் அனுமதிக்கப்பட்ட மின் சுமை வரம்பிற்குள் அமைக்கப்படும் EV சார்ஜிங் வசதிகளுக்கு தனி துணை மின்மீட்டர் (EV Sub-meter) அமைக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம்:

தனி மின் இணைப்பு பெற வேண்டிய அவசியமில்லை.

நிலைக்கட்டணம்/ குறைந்தபட்ச மாதாந்திர கட்டணம் (Fixed/Demand Charges) விதிக்கப்படாது.

மின் வாகன (EV) மின் கட்டணத்தின் கீழ் மின்பயன்பாட்டுக்கான யூனிட் கட்டணம் (Energy Charges) மட்டும் வசூலிக்கப்படும்.

இந்த நடைமுறையால் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், குடியிருப்பு வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கூடுதல் மின் உள்கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டிய தேவையின்றி, குறைந்த முதலீட்டில் விரைவாக மின்வாகன (EV) சார்ஜிங் வசதிகளை அமைக்க முடியும்.

தேவைக்கேற்ப தனி மின் இணைப்பு பெறும் வசதி

தற்போதுள்ள நுகர்வோரின் மின் சுமை மற்றும் கட்டணப் பிரிவை பாதிக்காமல், தேவையுள்ள இடங்களில் மின்வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பிற்காக தனியாக ஒரு புதிய மின் சேவை இணைப்பைப் பெறவும் அனுமதி வழங்கப்படும்.

மின்வாகன (EV) கொள்கையில் திருத்தங்கள் மற்றும் கட்டணச் சலுகைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை

மாநிலத்தில் மின்வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பு முதலீடுகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023-សំ தேவையான திருத்தங்களை மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக,

மின்வாகன மின்னேற்ற உள்கட்டமைப்பு உருவாக்கும் முனைவோர்கள்/ முதலீட்டாளர்கள் (EV Charging Infrastructure Developers) அதிகளவில் முதலீடு செய்ய ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்,

(EV Charging Station) தனித்துவமான மின் கட்டணப் பிரிவில் தற்போது நடைமுறையில் உள்ள நிலைக்கட்டணம்/ குறைந்தபட்ச மாதாந்திர கட்டணம் (Fixed/Demand Charges)-அல்லது கணிசமாகக் குறைக்கவோ அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முக்கிய நடவடிக்கைகள் மூலம், மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்கான ஆரம்பகட்ட தடைகள் பெருமளவில் குறைக்கப்படுவதுடன், தனியார் முதலீட்டாளர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பங்களிப்பு அதிகரிக்கும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் பொது மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பு விரைவாக விரிவுபெற்று, 2031-ஆம் ஆண்டிற்குள் 20,000 பொது EV சார்ஜிங் நிலையங்கள் என்ற தமிழ்நாடு அரசின் இலக்கை விரைவாக அடைய வழிவகுக்கும். மேலும், பசுமை போக்குவரத்து மற்றும் சுத்தமான எரிசக்தி பயன்பாட்டில் தமிழ்நாடு நாட்டின் முன்னணி மாநிலமாக திகழ்வதற்கும் இந்த நடவடிக்கைகள் உறுதுணையாக அமையும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.