×

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

 

திருவள்ளூர் அருகே கண் பார்வையற்ற இளம் பெண்ணின் இரண்டு வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொழுதவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுமதி. இவருக்கும் ஆந்திர மாநிலம் வரதபாளையம் பகுதியைச் சேர்ந்த சதிஷ் என்பவருக்கும் திருமணமான நிலையில் கண் பார்வை குறைபாடு உள்ளதை மறைத்ததன் காரணமாக ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கும் போது கணவர் சதீஷ் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கு  யக்ஷிதா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது

இந்நிலையில் தாய் சுமதி வீட்டுக்குள் இருக்க குழந்தை ரக்ஷிதா வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து கீழே ஊற்றி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் குழந்தை தொட்டியில் தவறி விழுந்து அலறியுள்ளது. தாய்க்கு கண் தெரியாத காரணத்தால் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது தண்ணீர் தொட்டியில் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து குழந்தையை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து திருவள்ளூர் தாலுகா போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண்பார்வை குறைபாடு உள்ள பெண்ணின் இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து  உயிரிழந்தது  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.