×

ரயில் மோதி மாணவர்கள் மரணம் : ரயில்வே ஊழியர்கள் சொன்ன தகவல்!

கோவை அருகே அரியர் தேர்வெழுத வந்த மாணவர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த சிவா(22) என்பவர் கோவை மயிலேரிபாளையம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பன் திருவாரூரை சேர்ந்த பவித்ரன்(22). இவரும் அதே கல்லூரியில் படித்து வருவதால் பீளமேடு அருகே அறை எடுத்து தங்கி வந்தனர். கல்லூரிகள் மூடப்பட்டதால் சொந்த ஊருக்கு இருவரும், அரிய தேர்வு எழுத கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவை
 

கோவை அருகே அரியர் தேர்வெழுத வந்த மாணவர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லை சேர்ந்த சிவா(22) என்பவர் கோவை மயிலேரிபாளையம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பன் திருவாரூரை சேர்ந்த பவித்ரன்(22). இவரும் அதே கல்லூரியில் படித்து வருவதால் பீளமேடு அருகே அறை எடுத்து தங்கி வந்தனர். கல்லூரிகள் மூடப்பட்டதால் சொந்த ஊருக்கு இருவரும், அரிய தேர்வு எழுத கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவை வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு பவித்ரன், சிவா மற்றும் மற்றொரு நபர் ஹோப் காலேஜ் ரயில்வே பாதை வழியாக சென்று கொண்டிருந்தனர். பவித்ரனும் சிவாவும் தண்டவாளத்தில் நடந்து சென்றதாகவும் அவர்களுடன் வந்த மற்றொரு மாணவர் தண்டவாளத்திற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. அப்போது அவர்களுக்குப் பின்னால் சென்னையில் இருந்து வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சிவா மற்றும் பவித்ரன் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இருவரும் உயிரிழந்தனர். அவர்களுடன் சென்ற மற்றொரு மாணவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடர்ந்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து பேசிய அப்பகுதி ரயில்வே ஊழியர்கள், தண்டவாளத்தில் நடந்து செல்லக்கூடாது என ரயில்வே துறை தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையிலும் அந்த தவறை மக்கள் மீண்டும் மீண்டும் செய்வதாக வேதனை தெரிவித்துள்ளனர். அந்த மாணவர்கள் இருவரும் தண்டவாளத்தில் நடந்து சென்றதால் இந்த விபத்து நேர்ந்ததாகவும் சென்னையில் இருந்து வந்த அந்த எக்ஸ்பிரஸ் ரயில் மிக வேகத்தில் வந்ததால் முன்கூட்டியே நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.