நாட்டு வெடிகள் வெடித்து 12 வயது சிறுவன் உள்பட 2 பேர் படுகாயம்! பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்
பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக வாங்கி செல்லப்பட்ட நாட்டு வெடி வெடித்ததில் 12 வயது சிறுவன் உட்படஇரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள குன்னம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவர் குன்னம் - வேப்பூர் சாலையில் திருவிழாக்களுக்கு பட்டாசுகளை விற்கும் நாட்டு வெடிகடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவரது மகன் சஞ்சய்(25) என்பவர் கடையில் விற்பனை செய்வதற்காக கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து நாட்டு வெடிகளை(சணல் கயிறு கொண்டு சுற்றப்பட்டு பலத்த சத்தத்துடன் திருவிழாக்களில் வெடிக்கப்படும் வெடி) வாங்கிக் கொண்டு ஒரு இருசக்கர வாகனத்தில் குன்னம் நோக்கி வந்துள்ளார். வழியில் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வந்து கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் பக்கவாட்டில் மாட்டியிருந்த நாட்டு வெடிகள் வைத்திருந்த பை, அவர் ஓட்டி வந்த வாகனத்தின் சைலன்ஸரில் பட்டு சூடானதில் பட்டாசுகள் திடீரென தீப்பற்றி பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில் பட்டாசை வாங்கி வந்த சஞ்சய் மற்றும் சாலையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த வேப்பூரை சேர்ந்த 12 வயது சிறுவன் சீனிஷ் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து காயமுற்றவர்களை மீட்ட அப்பகுதி மக்கள், உடனே அவர்கள் இருவருக்கும் அருகிலுள்ள வேப்பூர் வட்டார மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் இருவரும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக குன்னம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பட்டாசு வெடி விபத்தில்அருகில் உள்ள வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததோடு பட்டாசுகளை வாங்கி வந்த பல்சர் பைக்கும் எரிந்து சேதமடைந்தது. இந்த வெடி விபத்து சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.