×

#BREAKING நீலகிரியில் புதிதாக 2 ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கம்

 

நீலகிரி மாவட்டத்தில் குந்தா மற்றும் பந்தலூர் என்று 2 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி முதல் கட்ட அறிவிப்பு வெளியிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மறு சீரமைப்பு செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் புதிய ஊரக உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் குந்தா மற்றும் பந்தலூர் என்று 2 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு முதல்கட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியத்தில் தற்போது 38 கிராம ஊராட்சிகள் உள்ளது. இந்த ஒன்றியத்தை பிரித்து குந்தா ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியத்தில் 26 கிராம ஊராட்சிகளும், குந்தா ஊராட்சி ஒன்றியத்தில் 12 கிராம ஊராட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் தற்போது 22 கிராம ஊராட்சிகள் உள்ளது. இந்த ஒன்றியத்தை பிரித்து பந்தலூர் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 9 கிராம ஊராட்சிகளும், பந்தலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13  கிராம ஊராட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை 6 வாரத்திற்குள் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.