செவிலியர்கள் போன் மூலம் கேட்டு சிகிச்சை அளித்ததில் 2 மாத கர்ப்பிணி உயிரிழப்பு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் 2 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தோளி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கட்டிடப் பணியில் சென்ட்ரிங் வேலை செய்து வருபவர். இவருக்கும் எடையூரை சேர்ந்த அபினாவிற்கும் கடந்த ஆறு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. தற்போது அபினா இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று மாலை அபினாவிற்கு முதுகுவலி ஏற்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அபினாவின் கணவர் தாயார் உறவினர்கள் அழைத்து வந்துள்ளனர். அப்பொழுது அங்கு பணியில் மருத்துவர் இல்லாமல் அங்கிருந்த செவிலியர்கள் மருத்துவம் பார்த்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். பணியிலிருந்து செவிலியரும் மருத்துவருக்கு செல்போன் மூலமாக சிகிச்சைகளை கேட்டு அபினாவிற்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. அபினா மூன்றாண்டுகளுக்கு முன் நுரையீரல் மற்றும் இருதயம் சம்பந்தமாக சிகிச்சை பெற்றதாக தெரிய வருகின்றது. அபினாவிற்கு செவிலியர்கள் சிகிச்சை மேற்கொண்டபோது அங்கு வந்த மருத்துவர் பூஜா அபினா சிகிச்சை சம்பந்தமாக கேட்டறிந்து சிகிச்சை மேற்கொண்டதாகவும் சிறிது நேரத்தில் மருத்துவர் தங்களிடம் வந்து அபினா இறந்து விட்டதாகவும் தெரிவித்தாக உறவினர் தெரிவிக்கின்றனர் .
அபினாவின் உறவினர்கள் கூறுகையில், தங்கள் பெண் எங்களுடன் நடந்து தான் மருத்துவமனைக்கு வந்தார். நாங்கள் ஆம்புலன்ஸில் கூட்டி வரவில்லை. முதுகு வலி என்று தான் கூட்டி வந்தோம் மருத்துவமனையில் மூச்சு திணறல் என்கின்றனர். அபினா இறந்த உடன் மருத்துவமனை சார்பில் உடனடியாக காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதனால் அபினா மரணம் தொடர்பாக விசாரணை வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்களிடம் பேச வந்த காவல்துறை அதிகாரிகளிடமும் விளக்கம் அளிக்க வந்த மருத்துவர்களிடமும் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியாக திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் கழனியப்பன், முத்துப்பேட்டை ஆய்வாளர் மாரிமுத்து உறவினர்களிடம் பேசி அபினா உடலை பிரேத பரிசோதனைக்கு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பும் திருமணம் ஆகி ஆறே மாதத்தில் 2 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்ததால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .