×

சென்னை லோக்கல் ரயில்களில் 2 டோஸ் கட்டாயம்... சான்றை காட்டாவிட்டால் அபராதம் நிச்சயம்! 

 

கொரோனா பெருந்தொற்று ஒட்டுமொத்த உலகின் இயக்கத்தையே மாற்றியமைத்துள்ளது. எங்கு சென்றாலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது என கறாராக நடந்துகொண்டால்தான் கொரோனாவிலிருந்து நாம் தப்பிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதையெல்லாம் விட மிக முக்கியமான ஒன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ். சான்றிதழ் ஒரு பாஸ்போர்ட்டாகவே மாறிவிட்டது.

பெரும்பாலான நிறுவனங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களை அனுமதிப்பதில்லை. இன்றைய காலக்கட்டத்தில் கொரோனா தடுப்பூசி என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அது இல்லாமல் உங்களால் எங்கேயும் செல்ல முடியாத நிலைமையும் கூடிய விரைவில் வரும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. தெற்கு ரயில்வேயின் புதிய அறிவிப்பு அதை தான் காட்டுகிறது. ஆம் இரண்டு டோஸ் போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே சென்னை பெருநகர், புறநகர் ரயில்களில் (லோக்கல்) அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது.

நாளை மறுநாள் (ஜனவரி 10) முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை புறநகர் ரயில்களில் பயணிக்கும் அனைவருமே கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். ஆகவே பயணிகள் அனைவரும் கட்டாயம் இரண்டு டோஸ் போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை ஸ்மார்ட்போனிலோ அல்லது காகித வடிவிலோ காண்பிக்க வேண்டும். ஒருவேளை சான்றிதழ் இல்லாமல் பயணித்தால் அபராதம் விதிக்கப்படும். அதேபோல 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி. மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். UTS செயலியில் முன்பதிவு செய்யும் நடைமுறையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.