×

கள்ளச்சாராயத்தால் 14 பேர் பலி - மெத்தனால் விற்பனை செய்த 2 பேர் புதுச்சேரியில் கைது

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த நிலையில்,  மெத்தனால் விற்பனை செய்த புதுச்சேரி முத்தியால் பேட்டையை சேர்ந்த 2 பேரை மரக்காணம் போலீசார் கைது செய்தனர்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  இதை எக்கியார் குப்பம் மீனவர்கள் அருந்தியதாக தெரிகிறது. இதனால் ஆபத்தான முறையில் அவர்கள் மயங்கி விழுந்து உயிருக்கு போராடியுள்ளனர். இதை கண்ட  அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனை ஆகியவற்றில் சேர்த்தனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.  அத்துடன் நேற்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று நலம் விசாரித்த அவர் , உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார். இந்நிலையில் மரக்காணம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணன் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்துள்ளார்.
 
இந்த வழக்கு தொடர்பாக மரக்காணம், அனுமந்தை, நடுக்குப்பம், ஆலந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 10 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் அளித்த தகவலின்படி, மெத்தனால் விற்பனை செய்த புதுவை முத்தியால் பேட்டையை சேர்ந்த ஏழுமலை, பர்கத் ஆகிய 2 பேரை மரக்காணம் போலீசார் கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மெத்தனால் எங்கிருந்து கிடைத்தது. அதனை யார்? யாரிடம் விற்றனர்? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்து வருகிறது.