×

 26 லட்சம் வாக்காளர்கள் உயிரிழப்பு! 

 

S.I.R-க்கு பின் தமிழ்நாட்டில் மொத்தமாக 97,37,832 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், “தமிழகத்தில் உள்ள மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில் 97,37,832 பெயர்கள் நீக்கப்பட்டு, 5.43 கோடி பேர் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலில் 26 லட்சம் வாக்காளர்கள் உயிரிழப்பு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தமாக 66 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 3.39 லட்சம் பேர் இரட்டைப் பதிவு கொண்டுள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் பி.எல்.ஓ, இ.ஆர்.ஓ, சாவடி முகவர்கள் அல்லது ஆன்லைன் மூலம் ஜனவரி 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதலாக அனைத்து பூத்துகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். அந்த முகாம்களில் அவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் இறந்த வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 26,32,672. முகவரி இல்லாதவர்கள் 66,44,881 பேரும், இரட்டைப்பதிவுகள் 3,39,278 பேரும் என மொத்தமாக 97,37,832 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.