☰
×

சென்னையில் பாதுகாப்புப் பணியில் 18,000 போலீசார்... வானில் பறக்கும் ட்ரோன்கள்!

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் பல்வேறு பொருட்களை வாங்குவதற்காக வணிகப் பகுதிகளில் அதிகளவில் கூடி வருகின்றனர். அதே போன்று, சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சீரமைக்கவும் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, சட்டம்-ஒழுங்கு காவல்துறை, குற்றப்பிரிவு, போக்குவரத்துப் பிரிவு, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சுமார் 18,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பொதுமக்கள் அதிகளவில் பொருட்கள் வாங்குவதற்காகச் செல்லும் தியாகராய நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், என்.எஸ்.சி.போஸ் சாலை, எம்.சி.சாலை, ஜி.ஏ.சாலை, கோயம்பேடு மற்றும் அண்ணாநகர் உள்ளிட்ட முக்கிய வணிகப் பகுதிகளில் கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடைபெறும் பிக்பாக்கெட், செயின் பறிப்பு, செல்போன் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்காகவும், கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை உடனடியாகக் கண்டறிந்து பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காகவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மக்கள் கூட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் தியாகராய நகரில் 10, அடையாறில் 1, பூக்கடையில் 4, வண்ணாரப்பேட்டையில் 2, கீழ்ப்பாக்கத்தில் 4, திருவல்லிக்கேணியில் 2, கோயம்பேட்டில் 2 என மொத்தம் 25 தற்காலிகக் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோபுரங்களில் இருந்து காவல் துறையினர் உயரமான இடங்களில் நின்று பொதுமக்கள் நடமாட்டத்தையும், சந்தேகத்திற்கிடமான நபர்களின் செயல்பாடுகளையும் நேரடியாகக் கண்காணித்து வருகின்றனர். மேலும், 37 பைனாகுலர் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தொலைவில் இருந்தபடியே மக்கள் கூட்டத்தைக் கண்காணித்து குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாதுகாப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக தியாகராய நகர், அடையாறு, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி மற்றும் கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மொத்தம் 12 தற்காலிகக் காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, பொதுமக்கள் உடனடியாக காவல்துறையை அணுகி உதவி பெறும் வகையில் 37 தற்காலிகக் காவல் உதவி மையங்களும், சிசிடிவி காட்சிகளைக் கண்காணிப்பதற்காக 10 மினி சிசிடிவி கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் 100க்கும் அதிகமான காவலர்கள் உடலில் கேமிரா (Body-Worn Cameras) அணிந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டத்தில் காணாமல் போகும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களைக் கண்டறிந்து அவர்களின் உறவினர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் முக்கியப் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடாக 205 தற்காலிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தியாகராய நகர், புனித தோமையர் மலை, பூக்கடை, மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் இந்தக் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கேமராக்கள் மூலம் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகள் நேரடியாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணித்து உடனடியாகத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.

தியாகராய நகர், பூக்கடை, திருவல்லிக்கேணி மற்றும் கோயம்பேடு ஆகிய பகுதிகளில் கூட்ட நெரிசலைக் கண்காணிப்பதற்காக 7 ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. வானில் பறக்கவிடப்படும் இந்த டிரோன்கள் மூலம் மக்கள் கூட்டத்தின் நகர்வு மற்றும் நெரிசல் அதிகம் உள்ள பகுதிகள் கண்காணிக்கப்படுகின்றன.

மேலும், அடையாறு, திருவல்லிக்கேணி மற்றும் கோயம்பேடு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 4 அகன்ற எல்.இ.டி. திரைகள் மூலம் பாதுகாப்பு வாசகங்கள் மற்றும் குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை அறிவுரைகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் 66 ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் கூட்ட நெரிசலில் செல்போன், பணம், தங்க நகைகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது தொடர்பான அறிவுரைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

அதேபோல், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க வாகனங்களை ஒழுங்குபடுத்துவது குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்படுகின்றன. ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் தானியங்கி ஒலிபரப்பு முறையிலும் ஒலிபரப்பப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், குற்றச் சம்பவங்களில் ஈடுபடக்கூடிய சந்தேக நபர்களைக் கண்டறியவும் முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் (Face Recognition System) பயன்படுத்தப்படுகிறது.

இதற்காக உருவாக்கப்பட்டுள்ள செல்போன் செயலி மூலம் 199 காவல் குழுவினர் முக்கியமான வணிகப் பகுதிகளில் சந்தேக நபர்களைச் சோதனை செய்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாதாரண உடையிலும் ஆண் மற்றும் பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு, திருட்டு மற்றும் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், வணிக வளாகங்கள் மற்றும் சந்தைப் பகுதிகளில் பொதுமக்கள் கொண்டு வரும் உடைமைகளைச் சோதனை செய்வதற்காக சென்னை பெருநகர காவல்துறையின் நடமாடும் எக்ஸ்ரே உடைமைச் சோதனை வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தீபாவளிப் பொருட்கள் வாங்குவதற்காகச் செல்லும் பெண்களின் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளைப் பறித்துச் செல்லும் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், கழுத்தில் துணியால் கவசம் போன்று சுற்றிக் கட்டிக்கொள்ளுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்காகப் பொதுமக்களுக்குத் துணிக் கவசங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேபோல், கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்கும் வகையிலும், குழந்தைகள் காணாமல் போனால் அவர்களை எளிதில் அடையாளம் காணும் வகையிலும் குழந்தைகளின் கைகளில் அணிவிப்பதற்காக அடையாளக் கைக்கட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தீபாவளியை முன்னிட்டு செயல்படும் பட்டாசுக் கடைகளின் அருகிலும் காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பட்டாசுக் கடைகளில் தீ விபத்துகள் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சுகாதாரத் துறை ஆகியவற்றுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படியும், தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படியும் தீபாவளி நாளான நவம்பர் 8 ஆம் தேதி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

அரசு நிர்ணயித்துள்ள நேரக் கட்டுப்பாட்டைப் பின்பற்றி, பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து, சுற்றுப்புறச் சூழலுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைவரும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.