×

"தவறு செய்பவர்கள் யாரும் தப்ப முடியாது" என அமைச்சர் எச்சரித்த சில நாட்களில் 18 கணினி ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு! பகீர் பின்னணி

 

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) தலைமையகத்தில் மிகத் துணிச்சலான முறையில் ஒரு சதி வேலை அரங்கேறியுள்ளது.  வாரியத்தின் டெண்டர்கள், கொள்முதல் விவரங்கள் மற்றும் தற்போது நடந்து வரும் முக்கிய விசாரணைகள் தொடர்பான ரகசியத் தரவுகள் அடங்கிய குறைந்தது 18 கணினி ஹார்ட் டிஸ்க்குகள் (Hard disks) திருடப்பட்டுள்ளன.

பொருட்கள் மேலாண்மைத் துறையின் (material management department) கட்டுப்பாட்டில் இருந்த நிலக்கரி கொள்முதல் விவரங்களே இந்தத் திருட்டின் முதன்மை இலக்காக இருந்ததாகத் தெரிகிறது. இந்த விவரங்கள் அடங்கிய காகித ஆவணங்கள் (Hard copies) வசம் இருந்தாலும், கணினியில் இருந்த முக்கியமான மென்பிரதிகள் (Soft copies) அனைத்தும் தற்போது காணாமல் போய்விட்டன. புதிய மின்சாரத் துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் இந்தத் துறைக்கு நேரில் வந்து, "தவறு செய்பவர்கள் யாரும் தப்ப முடியாது" என்று கடுமையான எச்சரிக்கை விடுத்த சில நாட்களிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. வார இறுதி நாட்களில் (மே 16-17) அலுவலகத்தில் ஊழியர்கள் நடமாட்டம் மிகக் குறைவாக இருந்த நேரத்தைப் பயன்படுத்தி இந்தத் திருட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது.
கடந்த மே 20 ஆம் தேதி வாக்கில், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் தங்களது கணினிகளை இயக்கியபோது, அவற்றில் இருந்த முக்கியத் திட்டக் கோப்புகளும் (project files) அதிகாரப்பூர்வ ஆவணங்களும் காணாமல் போயிருப்பதை உணர்ந்தனர். இதனைத் தொடர்ந்து, கணினி நிர்வாக அதிகாரிகள் (System administrators) சோதித்தபோதுதான், கணினிகளில் இருந்து ஹார்ட் டிஸ்க்குகள் கழற்றப்பட்டு திருடப்பட்டிருக்கும் அதிர்ச்சி உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

குறைந்தது 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டிருந்தாலும், வெறும் 8 டிஸ்க்குகள் தொடர்பாக மட்டுமே இதுவரை துறை ரீதியான புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. நிதித்துறை உள்ளிட்ட பல பிரிவுகள் இத்திருட்டு குறித்து மின்வாரியத் தலைவர், மேலாண்மை இயக்குனர் (MD) அல்லது மின்வாரிய லஞ்ச ஒழிப்புத் துறைத் தலைவரிடம் புகார் அளிக்கத் தயங்குவது போல் தெரிகிறது. அந்தத் தரவுகளையும் டிஸ்க்குகளையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் யாரும், காவல்துறையை அணுகிப் புகார் அளிக்க முன்வரவில்லை. இருப்பினும், டெண்டர் மற்றும் கொள்முதல் பிரிவுகளைச் சேர்ந்த 8 உதவிப் பொறியாளர்கள், உதவிச் செயற்பொறியாளர்கள் மற்றும் பிரிவு அதிகாரிகள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் புகார் மனுக்களை அளித்துள்ளனர். மின்வாரிய தலைமையகத்தின் 4, 5, 7 மற்றும் 10 ஆகிய மாடிகளில் உள்ள அலுவலகங்களில் இருந்தே இந்த டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளன. இவற்றைத் தேடிக் கண்டுபிடிக்கலஞ்ச ஒழிப்புப் பிரிவின் கீழ் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மற்றொரு அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. இந்த முக்கியப் பிரிவுகளில் பெரும்பாலானவற்றில் இருந்த சிசிடிவி (CCTV) கேமராக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அகற்றப்பட்டுவிட்டன. 

கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்களில் முறைகேடுகளை அரங்கேற்ற வரும் இடைத்தரகர்களைப் பற்றிய எந்தப் பதிவும் சிசிடிவியில் சிக்கக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு அவை அகற்றப்பட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சிசிடிவி கேமரா கண்காணிப்பைத் தொடர்ந்து பரிந்துரைத்த போதிலும், "செலவு மிக அதிகமாக இருக்கும்" என்ற காரணத்தைக் கூறி கட்டிடப் பிரிவு மேற்பார்வைப் பொறியாளர் அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தற்போது பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவு 305-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருவல்லிக்கேணி துணை காவல் ஆணையர் டி.ஜெயச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். டான்ஜெட்கோவில் (Tangedco) டெண்டர் தொடர்பான முறைகேடுகள் குறித்து பல்வேறு விசாரணைகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில் இந்தத் திருட்டு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.