☰
×

விடிய விடிய பணியாற்றிய 15,000 ஊழியர்கள்- 22 சுரங்கப்பாதைகள் திறப்பு

 

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் பெய்த அதிகனமழையை தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் திறம்பட மேற்கொள்ளப்பட்டன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 6 இடங்களில் அதி கனமழையும் (20 செ.மீக்கு மேல்), 12 இடங்களில் மிக கனமழையும் (11.5 செ.மீக்கு மேல்) பதிவாகியுள்ளது. பாரிமுனையில் அதிகபட்சமாக 36.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இரவு முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். பல்வேறு நிலைகளில் 15,000 களப்பணியாளர்கள் இரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மழைநீரை வெளியேற்ற 650 மின் மோட்டார் பம்புகள் மற்றும் டீசல் எந்திரம் பொருத்தப்பட்ட பம்புகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள் இரவு முழுவதும் கள ஆய்வு செய்து பணிகளை ஒருங்கிணைத்தனர். வெள்ள பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையின் (NDRF) 1 குழுவும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் (TNDRF) 4 குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தற்போது அனைத்து முக்கிய பேருந்து வழித்தட சாலைகளிலும் மழைநீர் அகற்றப்பட்டது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கமின்றி சீரான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. காலை 6 மணிக்குள் அனைத்து சுரங்கப்பாதைகளும் திறக்கப்பட்டுள்ளன. தாழ்வான ஒரு சில பகுதிகளில் மட்டும் பம்புகள் மூலம் நீர் வெளியேற்றும் பணி தொடர்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 9 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதி மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. மழையால் உயிரிழப்போ, பெரிய விபத்தோ ஏற்படவில்லை. நிலைமை கட்டுக்குள் உள்ளது. 30 செ.மீக்கும் அதிகமாக மழை பெய்தும், மாநகராட்சியின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் காலை நேரத்திற்குள் இயல்பு நிலை கொண்டு வரப்பட்டுள்ளது.