×

தமிழகத்தில் 1500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் - அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்! 

 

தமிழகம் முழுவதும் 1,500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு சாலையில் உள்ள சட்டமன்ற தொகுதிக்கான அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடமாடும் மருத்துவ முகாம்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுகாதாரத் துறை சார்பில் ஆங்காங்கே உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் 4 ஆயிரத்து 55 இடங்களில் மருத்துவ பருவ மழைக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் ஒரு லட்சத்து 53  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ஒரே நாளில் 398 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில்,  இன்று சென்னையில் 500 மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

மழைக் காலங்களில் ஏற்படும் நோய் தொடர்பான காய்ச்சல், இருமல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நோய்களில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவே இந்த முகாம்கள் நடத்தப்படுகிறது. சென்னையில் ஸ்டான்லி, கேஎம்சி போன்ற மருத்துவமனைகளில் உள்ள 100 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மூலம் சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் மருத்துவ சேவை வழங்கி வருகின்றனர்.  மருத்துவர்கள் ,செவிலியர்கள் ,மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் என ஒன்றரை லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

2000ற்கும் மேற்பட்ட மருத்துவர்கள்,  4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ களப்பணியாளர்கள் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சுகாதாரத் துறை சார்ந்த பணிகளை செய்து வருகின்றனர்.  தமிழ்நாடு முழுவதும் 1,500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இயங்கி வருகிறது. சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது" என்றார். தொடர்ந்து பேசிய அவர் , மருத்துவமனைகள்,  பள்ளிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை 24மணி நேரமும் வெளியேற்ற மாநகராட்சி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் . விழுந்த மரங்களை அகற்றி சூழ்ந்துள்ள நீரினை மோட்டார்கள் மூலம் வெளியேற்றி வருகிறோம் என்றார்.