×

தமிழகம் முழுவதும் 1,500 நடமாடும் மருத்துவ முகாம்கள் தொடங்கின!

 

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் கடந்த ஐந்து நாட்களாக பெய்த மழை தற்போது தான் ஓய்ந்துள்ளது. தற்போது கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கியிருப்பதால், தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.


 
இதனை தடுக்கும் விதமாக மழைக்காலத்தில் மக்கள் பாதிப்புக்குள்ளாகிற காய்ச்சல், சளி, சேற்றுப் புண், வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளிலிருந்து மக்களைக் பாதுகாத்திட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆங்காங்கு இருக்கிற உள்ளாட்சி அமைப்புகளோடு ஒருங்கிணைந்து நடமாடும் மற்றும் மெகா சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது.  நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 115 இடங்களில் மருத்துவ முகாம்களும், 3 ஆயிரத்து 122 நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 

இவ்வாறு மருத்துவ சிகிச்சை அளித்ததில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 143 மக்கள் பயனடைந்திருக்கிறார்கள். அந்த வகையில் இன்று தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 5 ஆயிரம் இடங்களில் முகாம் நடக்கவிருப்பது இதுவே முதன் முறை. இந்த முகாம்கள் சென்னையில் 750 இடங்களில் நடைபெற உள்ளன. அதேபோல 1,500 நடமாடும் மருத்துவ முகாமிற்கு நடத்தப்படுகிறது. இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.