×

15 சதவீதம் ஊதிய உயர்வு - பள்ளிக்கல்வித்துறை சொன்ன நற்செய்தி!!
 

 

கல்வித் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 15 சதவிகித ஊதிய உயர்வு வழங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி,  கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது.  தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும்,  கடந்த நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அத்துடன்  இடைநிற்றல் இல்லாமல் கல்வி கற்கும் வகையில் வீடு தேடி கல்வி என்ற திட்டம் கொண்டுவரப்பட்டு, லட்சக்கணக்கான தன்னார்வலர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் சமக்ர சிக்‌ஷா அபியானில் பணியாற்றும் நிரலர், கட்டட பொறியாளர்கள், கணக்காளர்கள், மாத பணி நிறைவு அறிக்கை தயார் செய்வோர், தரவு உள்ளீடு செய்வோர், ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் 15% ஊதிய உயர்வு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த ஊதிய உயர்வு நவம்பர் 1-ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் ஆனால் ஆலோசகராக பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் நவம்பர் 11-ஆம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்து இருந்தால் அவர்களுக்கு இந்த ஊதிய உயர்வு என்பது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.